இந்திய ஓட்டப்பந்தய வீரரான மில்கா சிங், தனது மகள் அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரியும் அனுபவம் குறித்து பெருமிதத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் 25 லட்சத்திற்கும் அதிகமானோரை பாதித்துள்ளது, 1.7 லட்சத்திற்கு அதிகமானோரின் உயிரைப் பறித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் ஏழு லட்சத்திற்கு அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 42,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக, உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயார்க் நகரில் சுமார் 1.4 லட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 18,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தனது மகள் நியூயார்க் நகரில் மருத்துவராக பணியாற்றுவது குறித்து இந்திய முன்னாள் ஓட்டப்பந்தய வீரரான மில்காசிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "எனது மகள் மோனா மில்கா சிங் நியூயார்க்கில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். நாங்கள் அவரை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம். அவர் தினமும் எங்களுடன் பேசுகிறார், எங்களை பாதுகாப்பாக இருக்க வலியுறுத்துகிறார். நாங்கள் அவரைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுகிறோம், ஆனால் அவர் தனது கடமையை செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார். ஓட்டப்பந்தய வீரரான மில்கா சிங் இந்தியா சார்பாக மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.