லக்னோ அணிக்கு கேப்டனாக செயல்பட்ட கே.எல். ராகுலுக்கு மே 1 ஆம் தேதியில் நடந்த பெங்களூர் அணியுடனான போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது காலில் காயம் ஏற்பட்டது. இதன் பின் சென்னை அணியுடனான போட்டியிலும் ராகுல் விளையாடவில்லை. ராகுலின் விலகலைத் தொடர்ந்து லக்னோ அணிக்கு குருணால் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார்.
தொடர்ந்து, காலில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்ததால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக லக்னோ அணி கேப்டன் கே.எல். ராகுல் அறிவித்தார். அதேபோல் இந்தாண்டு நடைபெற இருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
09.05.23 pic.twitter.com/r0CxIbhVfD— K L Rahul (@klrahul) May 9, 2023
இந்நிலையில் கே.எல்.ராகுல் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது எனக் குறிப்பிட்டுள்ள அவர், சிகிச்சை அனைத்தும் சீராக நடந்ததற்கும் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டதற்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் மருத்துவர்களுக்கும் பணியாளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். வேகமாக குணமடைந்து வருவதாகவும் மீண்டும் களத்தில் இறங்கி எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டு வருவதாக வீடியோ வெளியிட்ட நிலையில் தற்போது தானும் வேகமாக காயத்தில் இருந்து மீண்டு வருவேன் என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.