இந்தியா - ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியிலும், நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலும் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், நான்காவது போட்டி நடைபெறவுள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில், கரோனா பரவல் அதிகரித்துவருகிறது. அதனைத் தொடர்ந்து அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் இந்திய அணி வீரர்கள், பிரிஸ்பேன் சென்றால், தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு மட்டுமே செல்லமுடியும். மற்றபடி எதற்காகவும், தாங்கள் தங்கியுள்ள தளத்திலிருந்து வெளியேற முடியாது என்ற நிலை ஏற்படும் எனவும், அதனால் இந்திய வீரர்கள் பிரிஸ்பேன் செல்வதற்கு தயக்கம் காட்டிவருவதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில், இதுகுறித்துப் பேசியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி, "இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் தினமும் பேசி வருகிறேன். இந்திய கிரிக்கெட் வாரியத்தினர் எங்களுக்கு ஆதரவாக உள்ளார்கள் என்பதைத் தவிர வேறு எதையும் கூறும் வகையில், அவர்களிடமிருந்து முறைப்படியான எந்தத் தகவலும் வரவில்லை. மேலும், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், எவ்வளவு கடுமையானவை என இனிதான் தெரியவரும்" எனத் தெரிவித்துள்ளார்.