உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நேற்று காலை ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவு காரணமாக தெலலிங்கா ஆற்றில் கடுமையான நீர்வரத்து ஏற்பட்டு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100 முதல் 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக அம்மாநில தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.
இதுவரை அங்கு 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வுக்குழு கண்காணிப்பு பணிகளுக்காக உத்தராகண்ட் விரைந்துள்ளது. அங்கு மீட்புப் பணிகள் இரண்டாவது நாளாக நடந்து வருகிறது.
இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான கட்டணத்தை, உத்தராகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளுக்கு வழங்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட உயிரிழப்பால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். மீட்புப் பணிகளுக்காக எனது போட்டிக் கட்டணத்தை வழங்க விரும்புகிறேன், மேலும் பலரை உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான டெஸ்ட் போட்டியில், இன்றோடு சேர்த்து இரண்டு நாள் மீதம் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய டெஸ்ட் அணி வீரர்களுக்கு, ஒரு டெஸ்ட் போட்டிக்குக் கட்டணமாக 15 லட்சம் வழங்கப்படுகிறது.