Skip to main content

இந்தியா vs இங்கிலாந்து : இந்தியா எதிர்கொள்ளும் மூன்று பிரச்சனைகள்!

Published on 12/07/2018 | Edited on 12/07/2018

இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக மிகச்சிறப்பான டி20 தொடரை நிறைவு செய்திருக்கிறது. 2 - 1 என்ற கணக்கில் தொடரை வென்றதன் மூலம், வலுவான அணி என்ற உத்வேகத்துடன் நாளை தொடங்கவிருக்கும் ஒருநாள் தொடரிலும் இந்திய அணி களமிறங்கும் என நம்பலாம்.
 

 

 

இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி மிகச்சிறப்பாக செயல்படக் கூடியது. ஆனால், தற்போதைய நிலையில், உலகில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இங்கிலாந்துடன் மோதுவது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கலாம். குறிப்பாக இந்திய அணியில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தத் தொடரில் அது சந்திக்க இருக்கும் மூன்று பிரச்சனைகள் என்னென்ன என்று இப்போது பார்க்கலாம். 
 

indian

 

 

பார்ட் டைம் பவுலர் யார்?
 

அம்பத்தி ராயுடு அணியில் சேர்க்கப்பட்டிருந்தால் பகுதி நேர பந்துவீச்சாளர் இருந்திருக்க மாட்டார். தற்போது அணியில் ரெய்னா இருக்கிறார். ஆனால், அவரையே ப்ளேயிங் லெவனில் எடுப்பார்களா என்பது சந்தேகம்தான். டி20 தொடரைப் போலவே ஒருநாள் தொடரிலும் ஐந்து பவுலர்களை இந்திய அணி களமிறக்கும். ஆனால், ஐந்து பேருமே சிறப்பாக ஆடுவார்கள் என்பதில் எந்த உறுதியும் கிடையாது. இக்கட்டான சூழலில் எக்ஸ்ட்ரா இருக்கும் பகுதிநேர பவுலரை வைத்து சூழலை சுமூகமாக்கலாம். 
 

அதேசமயம், ரெய்னாவை பகுதிநேர பவுலராக கணக்கில்கொண்டு இறக்கினால், நல்ல ஃபார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக் அணியில் சேரமுடியாத நிலை ஏற்படும். ஆக, பகுதிநேர பவுலர் நெருக்கடி என்பது இந்தியாவின் பேட்டிங் தரப்பையும் பாதிக்கும்.
 

வேகப்பந்து வீச்சாளர்களின் உடல்தகுதி
 

கணுக்கால் காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா ஏற்கெனவே இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிவிட்டார். முதுகுவலியால் அவதிப்பட்டு வரும் புவனேஷ்வர் குமார் கடைசி டி20 போட்டியில் இறங்கவில்லை; ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தே அவரை ஓய்வும், முதுகுவலியும் வாட்டி வதைத்தன. 
 

 

 

அதேபோல், ஒருநாள் தொடர் முடிந்ததும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாட வேண்டும் என்பதால், அவர்கள்து உடல்தகுதி என்பது தீவிரமாக கவனிக்கப்பட வேண்டியது. இதற்காக புவனேஷுக்கு ஓய்வளித்தால் ஷ்ரதுள் மற்றும் சித்தார்த் கவுல் ஆகிய அனுபவமற்ற வீரர்களையே நம்பியிருக்க வேண்டியிருக்கும். 
 

உமேஷ் யாதவும் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து தொடர்ந்து விளையாடி வருகிறார். அவருக்கும் ஓய்வும், உடல்தகுதியும் அவசியம் என்பதால், இந்தியாவுக்கு வேகப்பந்து செக்டார் கடும் நெருக்கடியைத் தரும். 
 

indian

 

 

நம்பர் 4-ல் களமிறங்கப் போவது யார்?
 

2015ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பின்னர் இந்திய அணியின் பேட்டிங் லைனப்பில் 4ஆவது இடத்தை அரை டஜன் வீரர்களை வைத்து சோதித்துப் பார்த்தார்கள். ஒவ்வொரு தொடரின் தொடக்கத்திலும் அந்த இடம் புதிய ஒருவரால் நிரப்பப்படும். தென்னாப்பிரிக்க தொடரில் அந்த இடத்தில் விளையாடிய அஜிங்யா ரகானே இந்தத் தொடரில் இல்லை. 
 

இந்தியாவில் சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் இருந்தாலும் அவர்கள் அந்த இடத்திற்கு பொருத்தமானவர்களா என்றால் இல்லை என்பதே பதில். விராட் கோலி அந்த இடத்திற்கு நகரலாம்; ஆனால், 3ஆவது இடத்தில் சிறப்பாக விளையாடும் அவரைத் தொந்தரவு செய்வது சரியாக இருக்காது. ஆக, கே.எல்.ராகுலை அந்த இடத்தில் களமிறக்கி சோதித்துப் பார்க்கலாம். உலகக்கோப்பைக்கு ஓராண்டு கூட இல்லாத நிலையில், அந்த இடத்தில் நிரந்தரமாக விளையாடும் ஒருவரைக் கண்டுபிடித்தாக வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருக்கிறது.