Skip to main content

தோனியைக் கடுப்பேற்றி வாங்கிக் கட்டிய மணிஷ் பாண்டே! 

Published on 22/02/2018 | Edited on 24/02/2018

தென் ஆப்பிரிக்காவுடனான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி சென்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்கவீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, இளம் வீரர் மணிஷ் பாண்டேவுடன் இணைந்து விக்கெட்டை இழக்காமல் விளையாடினார் மகேந்திர சிங் தோனி.

 

தொடக்கத்தில் நிதானமாக ஆடினாலும், கடைசி மூன்று ஓவர்களில் தோனி அதிரடியாக ஆடினார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் முதல் பந்தைச் சந்தித்த மணிஷ் பாண்டே மிட்-விக்கெட் திசையில் அடித்துவிட்டு ஒரே ஒரு ரன் மட்டும் எடுத்தார். ஆனால், இரண்டு ரன்கள் எடுக்கவேண்டும் என்று எதிர்பார்த்த தோனியை அவர் கவனிக்காமல், ட்ரெஸ்ஸிங் ரூம் திசையைப் பார்த்துக் கொண்டிருந்ததால் கடுப்பாகிப் போனார் தோனி. உடனே, மணிஷை அழைத்து காட்டமான வார்த்தைகளில் திட்டிவிட்டு, அடுத்த ஐந்து பந்துகளில் 18 ரன்கள் விளாசினார். 

 

 

 

 

இந்தப் போட்டியில் 28 பந்துகளில் 52 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார் தோனி. தோனியின் 11 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் அடித்த இரண்டாவது அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது முதல் 65 டி20 போட்டிகளில் ஒருமுறை கூட அவர் அரைசதம் அடிக்கவில்லை.

 

 

மிஸ்டர் கூல் என எப்போதும் பெருமையாக அழைக்கப்படும் தோனியின் பேச்சு கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வளர்ந்து வரும் ஒரு வீரரை தோனி இப்படி பேசியிருக்ககூடாது என ஒரு சிலரும், நல்ல வேளை தோனியைக் கடுப்பாக்கி அந்த ஓவரில் ரன்களை ஏற்றிவிட்டீர்கள் மணிஷ் என வேறு சிலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.