16 ஆவது ஐபிஎல் சீசனின் 39 ஆவது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக குர்பாஸ் 39 பந்துகளில் 81 ரன்களை எடுத்தார். இன்னிங்ஸின் இறுதியில் ரஸல் அதிரடி காட்டி 19 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார். குஜராத் அணி சார்பில் ஷமி 3 விக்கெட்களையும் ஜொஸ்வா லிட்டில் 2 விக்கெட்களையும் நூர் அஹமத் 2 விக்கெட்களையும் எடுத்தனர்.
இன்றைய போட்டியில் ஷர்துல் தாக்கூர் மூன்றாவது பேட்டராக களமிறங்கினார். டி20 கிரிக்கெட்டில் நம்பர் 3ல் களமிறங்குவது இதுவே அவருக்கு முதன்முறை. முன்னதாக 2021 தாக்கூர் சென்னை அணியில் விளையாடிய போது டெல்லி அணிக்கு எதிரான முதல் குவாலிஃபயர் ஆட்டத்தில் நம்பர் 4 ஆவது பேட்ஸ்மேனாக களம் வந்து முதல் பந்திலேயே வெளியேறினார். இன்றைய போட்டியிலும் 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
180 ரன்களை இலக்காக கொண்ட குஜராத் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் மட்டுமே இழந்து 180 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 51 ரன்களையும் சுப்மன் கில் 49 ரன்களையும் மில்லர் 32 ரன்களையும் எடுத்தனர். கொல்கத்தா அணி சார்பில் ஹர்ஷித் ரானா, ரஸல், சுனில் நரேன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ஜோஸா லிட்டில் தேர்வு செய்யப்பட்டார்.