Skip to main content

யாராக இருந்தாலும் தோற்றிருப்பார்கள்! - தோல்வி குறித்து தோனி கருத்து

Published on 19/05/2018 | Edited on 19/05/2018

நேற்றைய போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் யார் களமிறங்கி இருந்தாலும் தோல்விதான் முடிவாக இருந்திருக்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

 

DD

 

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதிய ஐ.பி.எல். டி20 தொடரின் 52ஆவது போட்டியில் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கைத் தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஆல்ரவுண்டர்கள் விஜய் சங்கர் மற்றும் ஹர்ஷால் பட்டேல் ஆகியோர் சிறப்பாக ஆடி தலா 36 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.  ப்ராவோ வீசிய கடைசி ஓவரில் நான்கு சிக்ஸர்களே டெல்லி அணி அதிக ரன்கள் எடுக்க காரணமாக இருந்தது. 

 

அடுத்ததாக களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ராயுடு மற்றும் வாட்சன் மிகச்சிறப்பாக ஆடினர். ஆனால், அடுத்தடுத்த விக்கெட்டுகள் வெளியேற சென்னை அணியின் வெற்றிவாய்ப்பு தள்ளிப்போனது. டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக பந்துவீசி ரன்ரேட்டையும் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்நிலையில், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்து, 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

 

DD

 

இந்தத் தோல்வி குறித்து பேசிய கேப்டன் தோனி, தோல்வி சிறிய வருத்தத்தைத் தருகிறது என்றாலும், நாங்கள் மிகச்சிறப்பாக ஆடினோம் என்பதில் உறுதியாக இருக்கிறேன். போட்டிக்கு முன்பாக வீரர்களிடம் புள்ளிப்பட்டியலைப் பார்க்காதீர்கள், இன்றைய போட்டியை மட்டுமே கவனத்தில் கொள்ளுங்கள் எனக் கூறியிருந்தேன். அதேபோல், உங்கள் பலத்தை பலப்படுத்துவதற்கு இணையாக பலவீனத்தையும் பலப்படுத்திக் கொண்டே இருங்கள் எனவும் அறிவுறுத்தியிருந்தேன். சில விஷயங்களில் மாற்றம் தேவைப்படுகிறது. ஓப்பனிங்கைப் போலவே, மிடில் ஆர்டரிலும் நல்ல இணை ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்தக் குறைகளையெல்லாம் களைந்து சீசன் முழுவதும் சிறப்பாக ஆடியதால்தான் நாங்கள் இப்போது ப்ளே ஆஃபுக்குள் நுழைந்திருக்கிறோம். இன்னும் சிறப்பாக ஆடுவோம் என நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார்.

 

மேலும், இரண்டாம் பாதியில் பிட்சின் நிலை கடினத்தன்மையை மேலும் மேலும் கூட்டிக் கொண்டே இருந்தது. எனது கணிப்பில் சொன்னால், எங்கள் அணியை விட இன்னொரு அணி இதில் சிறப்பாக ஆடியிருக்க முடியாது. டெல்லியின் பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள். ராயுடுவின் கேட்சைப் பிடித்தவுடன் மேக்ஸ்வெல்லின் முகத்தில் உருவான புத்துணர்ச்சியே வெற்றி அவர்கள் பக்கம் இருப்பதை உறுதி செய்திருந்தது எனவும் கூறினார்.