உலகக்கோப்பை போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை இந்த உலகக்கோப்பை தொடரில் தோனி படைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது.
உலககோப்பைகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் சங்ககாரா, கில்கிறிஸ்ட் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தில் தோனி தான் உள்ளார். முதல் இடத்தில் உள்ள சங்ககாரா 37 போட்டிகளில் 41 கேட்சுகள், 13 ஸ்டெம்பிங்குகள் உள்பட 54 டிஸ்மிஸல்களை செய்துள்ளார்.
இரண்டாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா வீரர் கில்கிறிஸ்ட் 31 ஆட்டங்களில் விளையாடி45 கேட்சுகள், 7 ஸ்டெம்பிங் உட்பட 52 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் உள்ள தோனி 20 போட்டிகளில் விளையாடி 27 கேட்சுகள், 5 ஸ்டெம்பிங்குகள் என 32 டிஸ்மிஸல்கள் செய்துள்ளார்.
சங்ககாராவின் சாதனையை முறியடிக்க இன்னும் 22 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படும் நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி குறைந்தது 10 ஆட்டங்கள் விளையாடும் நிலை உள்ளது. மேலும் தோனியின் கீப்பிங் திறமையும், அனுபவமும் கடந்த உலகக்கோப்பையை விட மெருகேறி இருப்பதால் இந்த தொடரில் தற்போதைய நிலைப்படி தோனி கண்டிப்பாக இந்த சாதனையை செய்ய வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சங்ககாரா மற்றும் கில்கிறிஸ்ட் ஆகியோரும் தங்களது கடைசி உலகக்கோப்பைகளில் அனுபவ பாடத்துடன் சிறப்பாக செயல்பட்டதால் தோனியும் தனது அனுபவத்தை சிறப்பாக வெளிப்படுத்துவார் என நம்பப்படுகிறது.அப்படி தோனி இந்த சாதனையை படைத்தால் இதனை மற்றொருவர் முறியடிக்க பல ஆண்டுகள் தேவைப்படும் எனவும் கூறப்படுகிறது.
அதிக விக்கெட்டுகள் பட்டியலில் தோனிக்கு அடுத்த இடத்தில் உள்ள மெக்கல்லம், பவுச்சர் ஆகிய இருவரும் ஓய்வு பெற்றுவிட்டதால் அடுத்த பல ஆண்டுகளுக்கு அவரது சாதனை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.