16வது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி நேற்று அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருந்த நிலையில் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இறுதிப் போட்டி என்பதால், போட்டியைக் காண இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து அஹமதாபாத்திற்கு படையெடுத்தனர் ரசிகர்கள். போட்டி ரத்தான நிலையில் சொந்த ஊர்களுக்குத் திரும்ப விரும்பாத அவர்கள், போட்டியைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அங்கிருந்த ரயில் நிலையத்தில் படுத்து உறங்கினர்.
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கான இறுதிப் போட்டி இன்று அதே நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஒரு வேளை இன்று மழையின் காரணமாக இறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும் என கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போகலே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று நடைபெறும் என நம்புகிறேன்; ஒரு வேளை 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நிர்ணயிக்கப்பட்டு விளையாட முடியாமல் போனால் சூப்பர் ஓவர் முறை இருக்கும். அதுவும் முடியாவிட்டால் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள குஜராத் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.