
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வடகாடு கிராமத்தில் காவல் நிலையம் அருகே உள்ள நிலத்தில் ஒரே வளாகத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் மற்றும் அண்ணா கைப்பந்துக் கழகம் விளையாட்டுத் திடல் உள்ளது. இந்த நிலையில் இந்த கோவிலில் ஒரு தரப்பில் பொங்கல் வைக்க தயாரான போது அதற்கு கைபந்து கழகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே இந்த இடம் தொடர்பாக இரு தரப்பிற்கும் பிரச்சனை ஏற்பட்டு இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் பொங்கல் வைப்பது தொடர்பாக மீண்டும் பிரச்சனை ஏற்படாமல் இருக்க வருவாய் துறையினர் மூலம் சமாதானம் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் வழக்கு நிலுவையில் உள்ளதால், இரு தரப்பினரும் கோவில் நுழையத் தடை விதிக்கப்பட்டது. அதே சமயம் வடகாடு காவல் ஆய்வாளர் ஒருதலைபட்சமாக செல்வடுவதாக இருதரப்பினருமே குற்றம் சாட்டினர். கடந்த மதம் இதே பிரச்சனை எழுந்தபோது, 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருச்சி சரக டிஐஜி வருண்குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது, காவல் ஆய்வாளர் இங்கே இருந்தால் பிரச்சனை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறினர். அப்போதே, “ டிஐஜி வருண்குமார் வடகாடு காவல் ஆய்வாளரிடம் எங்கே போனாலும் இதே சரியா இருக்கமாடீங்களா? எதாவது பிரச்சனை தானா..?” என்று கூறி அருகில் இருந்த டிஎஸ்பியிடமும் சரியாக பணி செய்யுங்கள் என்று கூறிச் சென்றார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து வடகாடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறவிருக்கிறது. இந்த நேரத்தில் ஆய்வாளர் தனபாலன் இங்கே இருந்தால் திருவிழாவில் பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் அவரை உடனடியாக வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யுங்கள் என்று கிராம மக்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்பே கோரிக்கை வைத்திருந்தனர். இது குறித்து உளவுத்துறையும் அறிக்கை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில்தான் தேரோட்டத் திருவிழா நடந்து கொண்டிருந்த போது கடந்த 5 ஆம் தேதி இரவு கடைவீதியில் இரு தரப்பு இளைஞர்களுக்கு இடையே வாய் தகராறு முற்றி பிரச்சனை ஏற்பட்டது. அதன் விளைவாக ஒரு தரப்பு இளைஞர்கள் மற்றொரு தரப்பினர் குடியிருப்பு பகுதிக்குச் சென்று தாக்குதல் நடத்திய போது இரு தரப்பினருக்கும் மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிற்கு இடையே பலரும் காயமடைந்துள்ளனர். ஆலங்குடி டி.எஸ்.பி. கலையரசன் மற்றும் ஆய்வாளர் தனபால் உள்ளிட்ட போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடித்து ஜீப்பில் ஏற்றும் போதுகூட கட்டையால் தாக்கிக் கொண்டனர். இருப்பினும் தொடர்ந்து போலீசார் எடுத்த நடவடிக்கையின் காரணமாக இருதரப்பு மோதல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் தான் போலீசார் முன்னிலையிலேயே தாக்கப்பட்டோம் அதனால் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரு தரப்பிலும் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் சம்பவம் அன்று இரவு தேரோட்டத் திருவிழா முடிந்து சென்ற வெளியூர் இளைஞர்களை பிடித்த போலீசார் காவல் நிலையத்தில் வைத்து ஆய்வாளர் தனபாலன் காரணமின்றி அதிகமாக தாக்கியதாகவும் காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் தான் முதல்கட்டமாக வடகாடு காவல் ஆய்வாளர் தனபாலன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே சம்பவத்தில் மேலும் சில காவல் துறையைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறுகின்றனர்.