16 ஆவது ஐபிஎல் சீசன் மார்ச் 31 இல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்களது அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றி ஐபிஎல்லுக்கான ஹைப் ஏற்றுகின்றன. அதே வேளையில் ஏலத்தின் போது எடுக்கப்பட்ட வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதும் மாற்று வீரர் அணியில் சேர்க்கப்படுவதுமான நிகழ்வுகளும் தொடர்கின்றன.
சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டிய சூழல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக 36 வயதாகும் கொல்கத்தா வீரர் ஷகிப் அல் ஹசன் விலகியுள்ளார். ஐபிஎல்லில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக நிதிஸ் ராணா கேப்டனாக செயல்படுகிறார். இந்நிலையில் ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசனும் விலகியது கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் கொல்கத்தா அணியில் ஒரு சிலரை தவிர்த்து மற்றவர்கள் இளம் வீரர்கள் என்பதால் அந்த அணி தற்போது மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்றாக இங்கிலாந்து அணி வீரர் ஜேசன் ராய் சேர்க்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜேசன் ராய் இதற்கு முன் டெல்லி அணிக்காக 2017 மற்றும் 2018 ஆகிய இரு சீசன்களிலும் ஹைதராபாத் அணிக்காக 2021 ஆம் ஆண்டிலும் விளையாடியுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான சீசனுக்கான ஏலத்தில் ரூ. 1.5 கோடியான அடிப்படை விலையில் பங்கேற்ற இவரை எந்த அணி நிர்வாகமும் வாங்க முன்வராத நிலையில் தற்போது கொல்கத்தா அணி ரூ.2.8 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.