16 ஆவது ஐபிஎல் சீசனின் 16 ஆவது லீக் போட்டி டெல்லி அருண்ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்றது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் வார்னர் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார். ஆனால் மறுபுறம் பிரித்வி ஷா 15 ரன்களுக்கும் மனிஷ் பாண்டே 26 ரன்களுக்கு வெளியேற பின்வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கில் வெளியேறினர். இதனிடையே அக்ஸர் படேல் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 54 ரன்களை சேர்த்து அணி நல்ல இலக்கை நிர்ணயிக்க உதவினார். 19.4 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக வார்னர் 47 பந்துகளில் 51 ரன்களையும் அக்ஸர் படேல் 54 ரன்களையும் எடுத்திருந்தனர். சிறப்பாக பந்து வீசிய மும்பை அணியில் பெஹ்ரெண்ட்ராஃப், பியூஷ் சாவ்லா தலா 3 விக்கெட்களையும் மெரிட்ரித் 2 விக்கெட்களையும்வீழ்த்தினர்.
தொடர்ந்து 173 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 65 ரன்கள் விளாசினார். அவருக்கு பக்கபலமாக இருந்த இஷான் கிஷன் 31 ரன்களுக்கு வெளியேற பின் வந்த திலக் வர்மாவும் அதிரடியாக ஆடி 42 ரன்களைக் குவித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யக்குமார் யாதவ் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். இந்நிலையில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடின. பரபரப்பான இறுதி ஓவரில் 6 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நோர்ட்ஜே வீசிய முதல் பந்தை கேமரூன் கிரீன் சிங்கிள் தட்டிவிட்டார். இரண்டாவது பந்தை அடித்த டிம் டேவிட்டின் கேட்சை முகேஷ் தவறவிட அப்பந்து ரன் ஏதும் எடுக்காமல் கடந்து போனது. மூன்றாவது பந்து லெக் சைடில் வீசப்பட டிம் டேவிட் அதை அடிக்காமல் தவற விட்டார். ஆனால் அம்பயர் அதை வைட் கொடுக்க, டெல்லி அணியின் கேப்டன் வார்னர் உடனடியாக ரிவ்யூ கேட்டார். ரிவ்யூவில் பந்து பேடில் பட்டது தெரிந்தது. வைட் திரும்பப் பெறப்பட அந்த பந்தும் ரன் ஏதும் இன்றி கடந்தது.
மூன்று பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டிம் டேவிட் சிங்கிள் எடுத்தார். 2 க்கு 3 எனும் நிலையில் கேமரூன் கிரீன் அடித்த பந்தில் டெல்லி அணி ரன் அவுட் சான்ஸை தவறவிட்டது. அந்த பந்தில் 1 ரன் கிடைக்க இறுதி பந்தில் 2 ரன்கள் தேவை எனும் நிலை உருவானது. பதற்றமான இறுதி பந்தில் இரண்டு ரன்கள் ஓடி மும்பை அணி வெற்றி பெற்றது. இறுதி பந்து வரை போராடிய மும்பை அணி 16 ஆவது ஐபிஎல் சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆட்ட நாயகனாக கேப்டன் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.