Skip to main content

டெல்லியில் நாயகனான தமிழ்நாட்டின் சாய் சுதர்ஷன்; குஜராத் அணி போராடி வெற்றி

Published on 04/04/2023 | Edited on 04/04/2023

 

Tamil Nadu's Sai Sudarshan, hero in Delhi; Gujarat team fought and won

 

16 ஆவது ஐபிஎல் சீசனின் 7 ஆவது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்றது. டெல்லி கேபிடல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா தொடக்கத்தில் இருந்தே தடுமாற்றத்துடன் ஆடினர். பிரித்வி ஷா 7 ரன்களில் ஆட்டமிழக்க மிட்செல் மார்ஷ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். சர்ஃப்ராஸ் கான் மற்றும் டேவிட் வார்னர் பொறுமையாக ஆட ரன் எண்ணிக்கை உயர்ந்தது. பொறுமையாக ஆடிக்கொண்டு இருந்த வார்னர் 37 ரன்களில் ஆட்டமிழக்க பின் வந்த ரூசோ முதல் பந்திலேயே வெளியேறினார்.

 

இறுதி ஓவர்களில் அக்ஸர் படேலின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்திருந்தது. அக்ஸர் படேல் 36 ரன்களை எடுத்திருந்தார். சிறப்பாக பந்து வீசிய குஜராத் அணியில் ஷமி 3 விக்கெட்களையும் அல்சாரி ஜோசப் 2 விக்கெட்களையும் ரஷித் கான் 3 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர்.

 

163 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான சஹா மற்றும் கில் இருவரும் தலா 14 ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் பாண்டியாவும் 5 ரன்களில் வெளியேறினார். அதன்பின் இணைந்த தமிழக வீரர்களான சாய் சுதர்ஷன் மற்றும் விஜய் ஷங்கர் ஜோடி குஜராத் அணியை சரிவில் இருந்து மீட்டது. பொறுப்பாக ஆடிய விஜய் சங்கர் 29 ரன்களில் ஆட்டமிழக்க, பின் வந்த மில்லர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். சிறப்பாக ஆடிய சாய் சுதர்ஷன் 48 பந்துகளில் 62 ரன்களை குவித்து குஜராத் அணி போட்டியை வெல்வதற்கு மிக உறுதுணையாக இருந்தார்.

 

 

 

Next Story

மாற்றி எடுத்த வீரர் மாஸ் காட்டிய சுவாரசியம்; ஐபிஎல்-இல் நடந்த ருசிகரம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Shashank Singh batting gt vs pbks match

மாற்றி எடுக்கப்பட்ட வீரரின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 2024இன் 17ஆவது லீக் ஆட்டம் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு சஹா 11 ரன்னிலே வெளியேறி ஏமாற்றினார். பின்னர் கேப்டன் கில்லுடன் இணைந்த வில்லியம்சன் பொறுமையாக ஆடினார். ஆனால், கேப்டன் கில் அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தினார்.

வில்லியம்சன் 26 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன் வழக்கத்திற்கு மாறாக அவரும் அதிரடியாக ஆடினார். 19 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மற்றொரு தமிழ்நாட்டு வீரர் விஜய் சங்கர் 8 ரன்களில் வெளியேறினார். விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தாலும், மறுபுறம் கேப்டன் கில் அரை சதம் கடந்து 89 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். இறுதி ஓவர்களில் அதிரடி ஆட்டக்காரர் ராகுல் டெவாட்டியாவின் 23 ரன்கள் உதவியுடன் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டுகளும், ப்ரார் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 200 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் தவான் 1 ரன்னிலே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். முக்கிய ஆட்டக்காரரான் பேர்ஸ்டோவும் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது அதிரட் காட்டிய பிரப்சிம்ரன் சிங் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாம் கரண் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.பெரிது எதிர்பார்க்கப்பட்ட சிக்கந்தர் ராசாவும் 15 ரன்களில் அட்டமிழக்க 111-5 என்று தடுமாறியது.

பஞ்சாப் அணி தோல்வி உறுதி என ரசிகர்கள் நினைத்த வேளையில், சஷாங்க் சிங் அதிரடியாக ஆடத் தொடங்கினார். அடுத்து வந்த ஜித்தேஷும் அதிரடியாக ஆரம்பித்தார். ஆனால், அந்த அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஜித்தேஷ் 16 ரன்களில் வெளியேறினார். பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறக்க விட்ட சஷாங்க் சிங் அரை சதம் கடந்தார். பின்னர் வந்த அஷுட்டோஷ் ஷர்மாவும தன் பங்குக்கு அதிரடியில் இறங்கினார். அஷுட்டோஷ் ஷர்மா 17 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆக, இறுதி வரை ஆட்டமிழக்கமாமல் நின்ற சஷாங்க் சிங் 29 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை அபார வெற்றி பெற செய்தார்.

இந்த சஷாங்க் சிங் பஞ்சாப் அணிக்குள் வந்த நிகழ்வு சுவாரசியமானது. ஐபில்2024 மினி ஏலத்தின் போது பஞ்சாப் அணி சஷாங்க் சிங் என்ற வீரரை எடுக்க முன்பே திட்டமிட்டு, அவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால், 19 வயது சஷாங்க் சிங்கை எடுப்பதற்கு பதிலாக 32 வயதான சஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுத்து விட்டது.

தற்போது அந்த சஷாங்க் சிங் தான், தனது அதிரடியால் பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்தி வெற்றி தேடித் தந்துள்ளார். குஜராத் அணி தரப்பில் நூர் அஹமத் 2 விக்கெட்டுகளும், அஸ்மத்துல்லா, உமேஷ், ரஷித், மொஹித், தர்ஷன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக சஷாங்க் சிங் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 2 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 4 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Next Story

MI vs GT: சறுக்கிய ஹர்திக்; சாதித்த சுப்மன் கில்

Published on 24/03/2024 | Edited on 25/03/2024
MI vs GT ipl live score update gujarat titans wins

ஐ.பி.எல் 2024 இன் 5ஆவது ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்குடையே அஹமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் இரவு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு கில் மற்றும் சஹா களமிறங்கினர். அதிரடியாகத் தொடங்கிய சஹாவை, பும்ரா தனது முதல் ஓவரிலேயெ துல்லியமான யார்க்கர் மூலம் க்ளீன் போல்டாக்கி 19 ரன்களுக்கு வெளியேற்றினார். அடுத்து கேப்டன் கில்லுடன் தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன் இணைந்தார். இந்த இணை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கில் 31 ரன்களில் சாவ்லா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஸ்மத்துல்லா 17 ரன்களில் வெளியேறினார். பிறகு வந்த மில்லர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபக்கம் பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசிக்கட்ட ஓவர்களில் ராகுல் டெவாட்டியாவின் அதிரடியான 22 ரன்கள் கைகொடுக்க குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. விஜய் சங்கர் 6 ரன்களும், ரசித் கான் 4 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். மும்பை அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும், கோயெட்ஸி 2 விக்கெட்டுகளும், சாவ்லா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு எளிதான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு இஷான், ரோஹித் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இஷான் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். அடுத்து ரோஹித்துடன் நமன் திர் இணைந்தார். ஆரம்பம் முதலே அதிரட் காட்டிய நமன் திர் 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ரோஹித்துடன் இம்பாக்ட் பிளேயராக டிவால்டு ப்ரீவிஸ் களமிறங்கினார். இருவரும் இணைந்து குஜராத் பந்து வீச்சை பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் விரட்டிய வண்ணம் இருந்தனர்.

தலைமை பொறுப்பின் பாரம் இல்லாததால் ரோஹித் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரை சதம் அடிப்பார் என மும்பை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ரோஹித் 43 ரன்களில் சாய் கிஷோர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ப்ரீவிஸ் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து திலக் வர்மாவுடன் இணைந்த டிம் டேவிட் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டேவிட் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய திலக் வர்மா 25 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கோயெட்ஸி 1 ரன்னில் வெளியேறினார். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக் 10 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

குஜராத் அணி தரப்பில் அஸ்மத்துல்லா, உமேஷ், ஜான்சன், மொஹித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதன் மூலம் முதன் முறையாக கேப்டன் பொறுப்பேற்றுள்ள கில் வெற்றிகரமாக தனது கேப்டன்சியை துவக்கி உள்ளார். மும்பை அணிக்கு முதல் முறை கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சறுக்கியுள்ளார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 11 ஆண்டுகளாக முதல் போட்டியில் தோற்ற மோசமான வரலாற்றை 12ஆவது ஆண்டாக தொடர்கிறது. சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.