ஹிப்னோதெரபி எனப்படும் சிகிச்சை முறை பல நேரங்களில் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது. காந்த சக்தி போல் கவர்ந்து உண்மைகளை வெளிக்கொணர அல்லது நோய்களைத் தீர்க்கப் பயன்படுத்தப்படும் இந்த சிகிச்சை முறையின் தன்மைகள் பற்றி ஹிப்னோதெரபி நிபுணர் டாக்டர் கபிலன் விளக்குகிறார்.
ஹிப்னாடிசம் என்கிற வார்த்தை சிலருக்கு பயத்தையும், சிலருக்கு ஆவலையும் தூண்டலாம். இயல்பாகவே புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்ட எனக்கு, ஆறாவது படிக்கும்போது புத்தகக் கடையில் இருந்த 'மனோவசியம்' என்கிற புத்தகம் படிக்கக் கிடைத்தது. மிகுந்த ஆவலைத் தூண்டிய அந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்தேன். அதில் சொல்லப்பட்டிருக்கும் பயிற்சிகளை மேற்கொண்டேன். அதன்பிறகு ஹிப்னாடிசம் தொடர்பாக வேறு என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன என்று தேடித்தேடிப் படித்தேன். 25 வருடங்களுக்குப் பிறகும் அதே ஆவல் இன்னமும் இருக்கிறது.
ஹிப்னோஸ் என்பது தூக்கத்திற்கான கிரேக்க கடவுளின் பெயர். இதன் மூலமே ஹிப்னாடிசம் என்கிற வார்த்தை பிறந்தது. இதை முதன்முதலில் பயன்படுத்தியவர் டாக்டர் ஜேம்ஸ் பிராய்டு. நம்முடைய மனம் மேல்மனம், ஆழ்மனம் என்று இரண்டு முறைகளில் வேலை செய்கிறது. நம்மை அறிந்து நாம் செய்யக்கூடிய அனைத்தும் மேல்மனம் மூலம் செய்யப்படும். நம்மை அறியாமல் நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்கள், நடவடிக்கைகள் ஆழ்மனத்தில் பதிவானவை. மனப்பிரச்சனைகள் அனைத்தும் ஆழ்மனத்தில் இருந்தே ஏற்படுகின்றன.
ஹிப்னாடிசம் என்பது பிரச்சனைக்கான மூலத்தைக் கண்டறிந்து நிரந்தரமாக அதை சரிப்படுத்தும் ஒரு முறை. மாயாஜாலம் போல சில நொடிகளில் மாற்றங்களை நிகழ்த்தும் ஹிப்னாடிச வீடியோக்களை யூடியூபில் பார்த்து அதைப் பலர் நம்புகின்றனர். என்னிடம் சிகிச்சைக்கு வரும் பலரும் அது போன்ற மாயாஜாலத்தை எதிர்பார்க்கின்றனர். ஸ்ட்ரீட் ஹிப்னாசிஸ் மற்றும் ஸ்டேஜ் ஹிப்னாசிஸ் ஆகிய இரண்டும் பொழுதுபோக்கிற்காக மட்டும் தான். அவை தான் நீங்கள் யூடியூப்பில் பார்க்கும் வீடியோக்கள். நாம் செய்வது கிளினிக்கல் ஹிப்னாசிஸ் ஆகும்.
ஹிப்னாடிசத்தின் விதிகளை நாம் சரியாகப் பயன்படுத்தினால் அதை வைத்து பொழுதுபோக்கவும் முடியும், மனப்பிரச்சனைகளை சரி செய்யவும் முடியும். கிளினிக்கல் ஹிப்னாசிஸ் என்பது மெதுவாகச் செய்யக்கூடிய ஒன்று. இதில் பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்காது என்பதால் யூடியூப்பில் இந்த ஹிப்னாடிச முறை பற்றிய வீடியோக்கள் வருவதில்லை. மனரீதியான பிரச்சனைகளை இந்த ஹிப்னாடிச முறையின் மூலம் குணப்படுத்தலாம்.