Skip to main content

ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருமா? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Dr Arunachalam | Breast Cancer | Women | man

 

நோயின் தீவிரத்தன்மை அதிகரிக்கும் போது மருத்துவரைப் பார்ப்பது எந்த வகையிலும் பலனளிக்காது, நோய்க்கான அறிகுறி ஆரம்பித்ததுமே மருத்துவரை அணுக வேண்டிய தேவையையும் அவசியத்தையும் டாக்டர் அருணாச்சலம் நமக்கு விரிவாக விளக்குகிறார்.

 

என்னிடம் சிகிச்சைக்காக ஒரு பெண்மணி வந்தார், மார்பக புற்று நோயா என்று பரிசோதித்து இருக்கிறார். பரிசோதனையின் முடிவில் மார்பக புற்றுநோய் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் அதற்கான சிகிச்சை எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை, கிட்டத்தட்ட ஆறுமாதம் அப்படியே விட்டிருக்கிறார். இப்பொழுது திடீரென வலியின் தன்மை அதிகரித்ததும் எங்களை அணுகினார். 

 

பரிசோதித்தால் மார்பகமே கருப்பு நிறமாக மாறிவிட்டது. நோயின் தன்மை நான்காவது நிலைக்கு போய் ஆறு மாதத்திற்குள் இறந்து விடுவார்கள் என்ற நிலையில் சிகிச்சை அளித்தோம். ஆனால் புற்றுநோயின் ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு மார்பகத்தை நீக்கி 20 வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்ந்தவர்களெல்லாம் உண்டு என்பதை மருத்துவத்துறையில் நிரூபித்திருக்கிறார்கள்.

 

விரல்களை குவித்துக் கொண்டு மார்பகத்தில் வலது புறத்தில் ஆரம்பித்து இடதுபுறமாக சுற்றி சுற்றி அழுத்தி சுயமாகவே பரிசோதனை செய்து பார்க்கலாம். பரிசோதனையின் போது எதாவது வலியோ, வேதனையோ, கட்டி போன்று தோன்றினாலோ மருத்துவரை அணுகி மம்மோகிராம் பரிசோதனை செய்து புற்றுநோயா அல்லது சாதாரண வலி தானா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

 

பாரம்பரியமாக நோய் இருந்தவர்களுக்கு தொடர்ச்சியாக வர வாய்ப்பு உள்ளது. நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணுக்கு மார்பக புற்று நோய் வந்து சிகிச்சை அளித்திருக்கிறோம். மார்பகம் என்பது ஆண், பெண் இருவருக்குமே பொதுவானது தான். பெண்ணுக்கு வளர்ந்து விடுகிறது. ஆணுக்கு வளர்ச்சியற்று இருக்கிறது. ஆணுக்கும் மார்பகத்தை சுற்றி வலியோ, கட்டியோ இருந்தால் பரிசோதித்து புற்றுநோயா என்று பார்த்துக் கொள்ளவும். மார்பக புற்றுநோய்க்கு ஆண், பெண் வேறுபாடெல்லாம் தெரியாது. இருவருக்கும் வரக்கூடியதே

 

அதிகப்படியான புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உணவு முறையில் சீரற்ற தன்மை உள்ள அனைத்து ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது. ஆரம்பத்தில் சுயபரிசோதனை செய்து பார்த்துவிட்டு மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டு சரி செய்து ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும்.