Skip to main content

‘சனாதன முகமாக விஜய்; வி.சி.க.-வுக்கு பேராபத்து’ - வல்லம் பஷீர்

Published on 11/12/2024 | Edited on 11/12/2024
Vallam Basheer criticized Adhav Arjuna

திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர், அரசியல் தொடர்பான பல்வேறு தகவல்களை நமது நக்கீரன் நேர்காணல் வாயிலாகப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் நடந்த எல்லோருக்குமான தலைவர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா மன்னர் ஆட்சி என்று யாரை சொல்கிறார்?  நேராக விமர்சனம் வைக்க அவருக்கு தெம்பு இருக்கிறதா? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை  எல்லா இடங்களிலும் வாரிசுகள் அரசியலுக்கு வருவதை தடுக்க முடியாத விதியாக இருக்கிறது. வாரிசுகள் அரசியலுக்கு வந்து விட்டால் வெற்றி பெற முடியுமா?  உயர்ந்த நிலை அடைய முடியுமா?  லட்சிய நோக்கம் இருப்பவர்கள் மட்டும்தான் வெற்றி அடைகிறார்கள். அப்படி இல்லாதவர்கள் தோல்வி அடைகிறார்கள். ஆதவ் அர்ஜுனா இன்று மெழுகேருகிறார் என்றால் அவரிடம் திடமான கொள்கை, கோட்பாடு உள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அரசியல் களத்தில் நாயகனாக திகழ்கிறார் என்றால் கொள்கை, கோட்பாடு மற்றும் இயக்கத்தின் லட்சிய வேட்கை என்று உள்வாங்கி இயங்குகிறார். அதனால்தான் வெற்றியடைகிறார். அதை எப்படி மன்னர் ஆட்சி என்று நீங்கள் வர்ணிக்க முடியும்?

மன்னர் ஆட்சியும் மன்னர் மாளிகையும் ஒழிக்கப்பட்டுவிட்டது. புதியதாக அரசியல் வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு இது தெரியாதா? தான் துணை பொது செயலாளராக இருந்த கட்சியை ஆதவ் அர்ஜுனா குறைத்து பேசியிருக்கிறார். விஜய் சொல்வதுபோல் திருமாவளவனை யாராவது மிரட்டிப் பணிய வைக்க முடியுமா? அழுத்தம் கொடுக்க முடியுமா? 2009 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. களத்தில் அவர் நின்றார். அந்த நேரத்தில் ஈழப் போராட்டம் கொதி நிலையில் இருந்தது. அப்போது இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று பழ.நெடுமாறன் நடத்திய மேடைகளில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திருமாவளவன் நின்றார். அவருடன் வைகோவும் இருந்தார். அவர்களை வைத்துக்கொண்டு அதே மேடையில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வை திருமாவளவன் வசைபாடினார்.

திருமாவளாவன் தேர்தல் அரசியலுக்கு வர முடிவெடுத்து நெய்வேலியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, கடைசி மனிதனுக்கும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று முழங்கினார். ஆனால் ஆதவ் அர்ஜுனா எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் மேடையில் அழுத்தத்திற்கு ஆட்கொள்ளப்பட்டு இருக்கிறார். எனவே ஆதவ் அர்ஜுனா வைத்த முழக்கம் என்பது திருமாவளவனின் ஆளுமையை குறைத்து மதிப்பிட்டு மேடை ஏற்பாடு செய்து, அவருக்கு எதிராக வைத்த முழக்கமாக நான் பார்க்கிறேன். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வி.சி.க.-வை தாக்கிப் பேசினால், அந்த கருத்தை வி.சி.க. எப்படி எடுத்துக் கொள்ளும். பா.ம.க.-வை அணைத்துக் கொண்டால் திருமாவளவன் என்ன செய்வார்.  அப்படிப்பட்ட நிலைபாட்டில்தான் ஆதவ் அர்ஜுனா இருந்துகொண்டு, சனாதன முகமாக தயாராகிக் கொண்டு இருக்கிற விஜய்யை மேடையில் வைத்துக்கொண்டு  தி.மு.க-வை தாக்குகிறார். ஒரு கூட்டணில் இருந்து கொண்டு அந்த கூட்டணி தலைமையாக இருக்கக்கூடிய கட்சி மீது கல் வீசிப் பார்ப்பது ஆதவ் அர்ஜுனா வேலையாக உள்ளது. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது எத்தகைய பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது என்பது அவருக்கு தெரியாதா? திருமாவளவன் ஆசியோடு அவர் பேசுகிறரா? என்ற ஐயம் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எழுந்து உள்ளது. இதற்கு திருமாவளவன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

வி.சி.க துணை பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனனை நியமித்த காலத்திலிருந்து அவரின் உடல் மொழியும் பேச்சு மொழியும் தி.மு.க.-விற்கு எதிராகவே இருக்கிறது. நிர்மலா சீதராமன் உடல் மற்றும் வாய் மொழியும் ஆதவ் அர்ஜுனா உடல் மற்றும் வாய்மொழியும் ஒன்றாக வெளிப்படுகிறது என்பதை கவனித்துப் பாருங்கள். வி.சி.க. கட்சி மிட்டாமிராசு  கட்சி அல்ல, கோடீஸ்வரர் கட்சி அல்ல. விளிம்புநிலை மக்களுக்கான கட்சியாக இருந்தது. ஆனால் ஆதவ் அர்ஜுனா, வி.சி.க.வை கோடீஸ்வரர்கள் கட்சி போலவும் பெரிய கார்ப்பரேட் கட்சி போலவும் பேசியது, இத்தனை நாட்களாக திருமாவளவன் சேர்த்துவைத்த பேரும் புகழுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். விஜய்யிடம் ஆதவ் அர்ஜுனா போவதும், விஜய் பா.ஜ.க-விடம் போவதும் பிரச்சனை கிடையாது. அது அவரவர்களின் சொந்த விருப்பம். சமூக நீதி ஆதரவாகவும் சனாதனத்திற்கு எதிராகவும் குரல் எழுப்பும் வி.சி.க. கட்சியில் இருந்து கொண்டு சனாதனதிற்கு ஆதரவாக ஆதவ் அர்ஜுனா மெல்லிய குரல் எழுப்புவது பேராபத்தில் முடியும். பா.ஜ.க.-வில் இருந்து வி.சி.க.-வுக்கு வந்தால் ஏற்றுக்கொள்ளாதீர்கள் என்றும் அவர்களுக்கு வி.சி.க.-வில் இடமில்லை என்றும் பிரகடனப்படுத்தியவர் திருமாவளவன். இது ஆசியா கண்டத்தில் யாரும் செய்ய முடியாத சாதனை. அப்படிப்பட்ட மெஜஸ்டிக் லீடருக்கு பேராபத்து சூழ்ந்துள்ளது. ஆதவ் அர்ஜுனா, டெல்லி என்ன சொல்கிறதோ அதை அப்படியே செய்கிறார் என்றார்.