Skip to main content

மலத்தை அடக்கினால் மாரடைப்பு ஏற்படுமா? - சித்த மருத்துவர் அருண் விளக்கம்

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

 Siddha Doctor Arun Health tips

 

மலத்தை அடக்குவதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து சித்த மருத்துவர் அருண் விளக்குகிறார்.

 

பணியில் இருக்கும் பெண்கள் வீட்டுக்கு வந்த பிறகு தான் சிறுநீர் கழிக்க முடியும் என்கிற சூழ்நிலை இருக்கிறது. அதுவே தொற்றுக்கு ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. 40 வயதைக் கடந்த பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் ஏற்படும். இது தொடர்ந்தால் சிறுநீரக கற்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. சிறுநீரகம் தன் செயல்பாட்டினை இழக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டால் தான் அடுத்து நாம் உண்ணும் உணவு உள்ளே சென்று நமக்கு நன்மை பயக்கும்.

 

மலத்தை அடக்கினால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் இருதய அடைப்பு வரை ஏற்பட வாய்ப்புண்டு. மாரடைப்பு ஏற்படவும் இது காரணமாக இருக்கிறது. வயிற்றை சுத்தப்படுத்தாமல் விட்டால் செரிமானக் கோளாறு ஏற்படும். அதன் மூலம் உடலில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகும். இதனால் காய்ச்சல் கூட ஏற்படுகிறது. கொதிக்க வைத்த நீரை அருந்தினால், கிருமிகளால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும். நம்முடைய அன்றாட உணவில் மோர் நிச்சயம் இருக்க வேண்டும்.

 

உடலுக்கு நல்ல பாக்டீரியாக்கள் கிடைப்பதற்கு மோர் உதவும். அதுபோலவே தினமும் நாம் நெய்யை உருக்கிச் சாப்பிட வேண்டும். நெய் சாப்பிட்டால் கொழுப்பு அதிகமாகிவிடும் என்று பலர் நினைக்கின்றனர். நெய்யில் உள்ள கொழுப்பு உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு தான். இவற்றை சரியான முறையில் செய்து வந்தால் எந்த நோயும் நம்மை அண்டாது. இவை அனைத்துமே நம்மால் எளிமையாக செய்யக்கூடியவை தான். சரியாக சிறுநீர் கழித்து, மலத்தை வெளியேற்றி, நல்ல உணவுகளை உண்ண வேண்டும். அவ்வாறு செய்தால் நோய்கள் நம்மை நெருங்காது என்பதே சித்தர்களின் வாக்காக இருக்கிறது.

 

 

Next Story

டாஸ்மாக்கிற்கு இருக்கும் எதிர்ப்பு கூட இதற்கில்லை - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
  Dr Radhika | Mobile phone | Youngsters

வாழ்வியல் மாற்றமும், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பங்கு விளைவிக்கிறது என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தனி மனிதனுக்கு  மன அழுத்தம் கொடுக்கத்தான் செய்கிறது. முந்தைய காலத்தில் வேலை பார்க்கும் நடைமுறையே  நன்றாக இருந்தது. அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகே அது அப்படியே மாறி விட்டது. தனித்து வேலை பார்க்கும் சூழலில் நிறைய சிக்கலும் இருக்கிறது. மேலும், அலுவலகத்திலும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வழக்க நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை டிப்ரெஷன் அதிகமாக காரணமாகிறது. வெளிநாடுகளில் தற்போது நிறைய ஆரோக்கிய மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். பள்ளி அருகே பாஸ்ட் புட் கடைகளை வைக்க அனுமதிப்பதில்லை. 

நம் நாட்டில் டாஸ்மாக்கிற்கு காட்டும் எதிர்ப்பை இந்த ஜங்க் ஃபுட் கடைகளுக்கு காட்டுவதில்லை. ஜங்க் ஃபுட் உணவுகள் ஆரோக்கியமற்ற உடல்நிலையை கொண்டு வரும். தூக்கமற்ற சூழலும் மன அழுத்தத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. குழந்தைகள் 16 மணி நேரம் உறங்கவேண்டும் என்றால் பெரியவர்கள் 6-7 மணி நேரம் தூங்குதல் அவசியம். இது போன்று குவாலிட்டி ஸ்லீப் பாதிக்கும் போது 'பிரைமரி இன்சோம்னியா' வருகிறது. நெடு நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. நம் இயல்பு காலையில் விழித்து இரவில் தூங்க வேண்டும். அப்பொழுது தான் சரியான ஹார்மோன்ஸ் இயங்கி  நம் உடல் சரியாக பராமரிக்கும். 

ஆனால் இன்றைய சூழலில் உடல்நிலைக்கு எதிராக இரவில் வேலை பார்த்து பகலில் தூங்குகிறார்கள். இப்படியான சூழல் வரும் போது தான் உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அன்றைய காலத்தில் 'இன்சோம்னியா' என்ற நோயே கிடையாது. இன்றைய காலத்தில் குழந்தைகள் கூட பெற்றோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இரவு ஒரு மணி வரை கூட விழித்து மொபைல் பார்க்கிறார்கள். குறைந்த வயதில் டிப்ரெஷன் வர இதுவும் ஒரு காரணம் தான்.  உணவுமுறை மாற்றம், இனிப்பு வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது, சரியான அளவில் நீர் பருகாமல் இருப்பது கூட இதுபோன்ற இன்னல்களை வரவைக்கிறது.

Next Story

குழந்தைகளுக்கு சித்த மருந்துகள் கொடுக்கலாமா? - சித்த மருத்துவர் அருண் விளக்கம்

Published on 22/12/2023 | Edited on 26/12/2023
 Dr Arun | Cold | Fever | Child | Siddha | Recap |

சித்த மருத்துவ மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற கேள்விக்கு பிரபல சித்த மருத்துவர் அருண் விளக்கமளிக்கிறார்.

இன்றைய இளம் தாய்மார்களுக்கு தங்களுடைய குழந்தைகளுக்கு சித்த மருத்துவ மருந்துகள் கொடுக்கலாமா என்ற சந்தேகம் வருகிறது. முதலில் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான நோய் உருவாகிறது என்று பார்ப்போம். காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், வயிற்றுப்போக்கு, தோலில் அரிப்பு இதற்கெல்லாம் உடனடியாக பெரிய எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை.

பூமிக்கு வந்த உயிர் இங்குள்ள நுண்ணுயிர்களை எதிர்கொள்ளும்போது சில எதிர்வினை நடக்கத்தான் செய்யும். அதுதான் மேலே சொன்ன சிறிய அளவிலான நோய்களாகும். அடிக்கடி குழந்தைகளுக்கு சளி பிடிக்கத்தான் செய்யும், எங்கேயாவது சளியால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தையை தூக்கி கொஞ்சினாலோ, பேருந்துகளில் பயணிக்கும்போது அருகே இருப்பவர்களுக்கு தொற்று இருந்தால் கூட சளி பிடிக்கத்தான் செய்யும். சக குழந்தைகளோடு விளையாடும்போது கூட யாராவது ஒருவருக்கு சளி இருந்தால் கூட மற்றவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

யாரோடும் பழகாமலும், பார்க்காமலும், தொடாமலும் இருக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. ஆனால் எந்த நோய் வந்தாலும் அதை எதிர்த்து நிற்கிற எதிர்ப்பு சக்தியை குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும். சிறுவயதிலேயே தாய்ப்பாலுடன் இணைத்து உரை மருந்து கொடுப்பார்கள், அதை ஆறு மாதம் வரை கொடுக்கலாம். ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது குழந்தைக்கு உரை மருந்தின் அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும். 12 வயது வரை கொடுக்கலாம். 

இந்த உரை மருந்தில் சுக்கு, அதிமதுரம், அக்கரகாரம், வசம்பு, ஜாதிக்காய், மாசிக்காய், கடுக்காய், திப்பிலி, பெருங்காயம், பூண்டு அனைத்தும் கலந்து இருக்கும். முன்னெல்லாம் இதை வீட்டிலேயே தயாரிப்பார்கள், இப்பொழுது நகரங்களில் நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கிறது. வாங்கி பயன்படுத்தலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமானாலே காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் குழந்தைகளை தாக்காமல் காக்கலாம். இந்த சித்த மருந்துகளை தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் நோயின் தன்மை தீவிரமடைந்தால் அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக்கொள்ளலாம்.