திருநெல்வேலி மாவட்டன் பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சீவலப்பேரி, பொட்டல் நகரை சேர்ந்தவர் வள்ளிமுத்து (வயது 24). இவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார். இதுகுறித்து சீவலப்பேரி காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது.
இதையடுத்து கங்கைகொண்டான் வட்ட காவல் ஆய்வாளர் வேல்கனி இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். மேலும் சமூக வலைத்தளங்களில் இரு தரப்பினரிடையே பிரச்சனையை தூண்டும் விதமாக வீடியோவை வெளியிட்ட வள்ளிமுத்துவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், “திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” தெரிவித்துள்ளார். இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக வீடியோ பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.