Skip to main content

"ஹார்ட் அட்டாக் வருவதற்கான அறிகுறிகள்..." - மருத்துவர் அருணாச்சலம் விளக்கம்

Published on 28/10/2022 | Edited on 28/10/2022
"Symptoms of a heart attack...."- Dr. Arunachalam explained!

 

'நக்கீரன் 360' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் அருணாச்சலம் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "இன்சுலின் குறைவாக சுரப்பதனால் வருவது சர்க்கரை வியாதி. இருதயம் மூன்று விதமான வேலைகளைச் செய்கிறது. ஒன்று நன்றாக விரிந்து சுருங்கி ரத்தத்தை உடல் முழுவதும் பம்ப் செய்கிற மோட்டார் வேலை. அந்த உறுப்பில் மூன்று ரத்தக் குழாய்கள் இருக்கிறது. அந்த மூன்று ரத்தக் குழாய்களிலும் பெரிய ரத்தக் குழாய் எல்லா செல்களுக்கும் இருதயத்துடைய ரத்தப் பரிமாற்றம் நடத்துவதற்கு. அதில் ரத்தம் சென்றால் இருதய செல்களோ இருதயத்துடைய சுவர்  மற்றும் தசைகளோ வேலை செய்யும். அந்த ரத்தக் குழாய்களில் ஏற்படுகின்ற அடைப்பே ஹார்ட் அட்டாக் என்கிறோம். 

 

மூன்றாவது இருதயத்தில் ஒரு வேலை இருக்கிறது. அது என்னவென்றால், இருதயம் துடிப்பது ஆகும். தானாகவே எலெக்ட்ரிசிட்டி உருவாகி அது ஓர் வேவ் மாதிரி வந்து அந்த இருதயத்தைச் சுருங்க வைக்கவும் விரிய வைக்கவும் உதவுகிறது. அதைத் தான் நாம் இசிஜி மூலமாகப் பதிவு செய்கின்றோம். மூன்றில் எதில் குறைபாடு இருந்தாலும் ஹார்ட் அட்டாக் வரலாம். இதைத் தாண்டி சிறு வயதில் இருந்தே ஏதாவது நோய் இருந்து அது வெளிப்படாமல் இருந்திருக்கலாம். 

 

அளவுக்கு அதிகமாக வேலைகளைச் செய்யும் நபர்கள், அளவுக்கு அதிகமாக கண் விழித்திருக்கும் நபர்கள் ஆகியோர் தாங்கள் ஃபிட் ஆக இருக்கிறோமா என்பதை தெரிந்து கொண்டு 'ஒர்க் அவுட்' செய்யப் போனால் நல்லது. எல்லாவற்றையும் பரிசோதனைகள் மூலம் நாம் கண்டுபிடித்துவிட முடியாது. ஆனால், சிறிய அறிகுறிகள் கூட நம் உடலில் ஏற்பட்டால் விஞ்ஞானத்தின் மூலமாக எதாவது காரணம் இருக்கா? என்று கண்டுபிடித்து வேலையைச் செய்ய வேண்டும். உடற்பயிற்சி  செய்யும் போது மூச்சு வாங்குவது, உடற்பயிற்சி செய்யும் போது நெஞ்சு வலி ஏற்படுவது, நடக்கும் போது மூச்சு திணறல் ஏற்படுவது ஆகியவற்றை நாம் உதாசீனப்படுத்தக் கூடாது. 

 

ஒருவர்  திடீரென்று உடற்பயிற்சி செய்யும்போதோ, மன உளைச்சலுக்கு ஆளாகும்போதோ இந்த மாதிரியான மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதற்குக் காரணம் ஆகிறது. மேலும், உடற்பயிற்சியின்மையும் உணவும் ஒரு காரணம். வழக்கமான வேலைகளைத் திடீரென பார்க்கும் போது மூச்சுத் திணறல் மற்றும் மூச்சு வாங்குவது, நெஞ்சுவலி உள்ளிட்டவை  ஹார்ட் அட்டாக் வருவதற்கான அறிகுறிகள் ஆகும். ஹார்ட் அட்டாக் வந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்." இவ்வாறு மருத்துவர் தெரிவித்துள்ளார். 


 

 

Next Story

“பா.ஜ.கவினருக்கு எதையும் நேரடியாக சொல்லும் பழக்கம் கிடையாது” - மாணிக்கம் தாகூர்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Congress candidate Manikam Tagore says What does Nirmala Sitharaman know in interview for loksabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 10 தொகுதியில் ஒன்றான விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு  மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டி பின்வருமாறு...

காங்கிரஸ்காரர்கள் பா.ஜ.கவை பற்றி மக்களிடத்தில் ஒரு பொய்யான பயத்தை உருவாக்குகிறார்கள் என்று பிரதமர் மோடி சொல்கிறாரே?

“திருடப் போகிறவர்களை பிடித்தால் அவர்களிடம் எந்த மாதிரியான பதற்றம் உருவாகுமோ அந்த மாதிரியான பதற்றம் தான் மோடியிடம் இருக்கிறது. குஜராத் மாநிலத்திற்கு சென்றால் அங்கு சிறுபான்மையினர் மக்களின் நிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 25 வருடமாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு எம்பி கூட அங்கு கிடையாது. அங்கு 9 சதவீத சிறுபான்மையின மக்கள் இருக்கிறார்கள். ஒரு அமைச்சர் கூட இல்லாமல், ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமல் ஒரு கட்சி நடத்த முடியுமா?.ஆனால் அங்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவை பொறுத்தவரையில் இதனைத் தொழிலாக வைத்திருக்கிறது. ஆர்எஸ்எஸ் இதை அவர்களுடைய கொள்கையாக வைத்திருக்கிறது. சிறுபான்மை மக்களை ஓரங்கட்டி, அவர்களை நிராயுதபாணியாக ஆக்க வேண்டும், அவர்களை கேவலப்படுத்த வேண்டும், அதை வைத்து அரசியல் செய்ய வேண்டும். இதுதான் பா.ஜ.க.வின் வேலை”.

தென்மாநிலங்களில் வெற்றி பெறும் காங்கிரஸ் கூட்டணி வட மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி ஏன் வெற்றி பெற முடியவில்லை?

“காங்கிரஸினுடைய மொத்த அரசியலுமே ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய கட்சியாகத்தான் எப்போதும் இருந்திருக்கிறது. ஆனால் பாஜக, ஆங்கிலயேர்களுக்கு அடிபணிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணம் எல்லாம் முகலாய படையெடுப்புகளை மையமாக வைத்து தான் அவர்களுடைய அரசியல் இருந்திருக்கிறது.  வட மாநிலங்களில் ஆங்கிலேயர்கள், இந்து - முஸ்லிம்  மக்கள் இடையே பல காலமாக விரிசலை கொண்டு வந்தார்கள். இந்து - முஸ்லிம் கலவரங்கள் நிறைய நடந்திருக்கிறது. இதனை மையப்படுத்தி தான் பா.ஜ.க.வும் ஆர்எஸ்எஸ் அரசியல் செய்து வருகிறது.

100 வருடத்திற்கு முன்பாக இந்து மக்களை மையப்படுத்தி தான் ஆர்எஸ்எஸ் அரசியல் செய்து வந்தது. அதற்கேற்றார் போல் இந்தியா- பாகிஸ்தான் பிரிகிறது. அப்பொழுது இங்கு இருக்கக்கூடிய இந்து மக்கள் அகதிகளாக அங்கு செல்கிறார்கள். அங்கு இருக்கக்கூடிய இஸ்லாமிய மக்கள் இங்கு அகதிகளாக வருகிறார்கள். இந்த அரசியல் களம் அவர்களுக்கு நல்ல களமாக அமைந்துவிட்டது.

ஆனாலும் 1947 இல் இருந்து 1967 வரை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதன் பிறகு, காங்கிரஸ் கட்சியில் நடந்த உட்கட்சி பூசலால் அங்கிருந்த முக்கிய தலைவர்கள் அங்கிருந்து பிரிந்து புதிதாக கட்சி தொடங்கினர். அந்தக் கட்சியோடு சேர்ந்து ஜன சங்கம் என்ற கட்சியை ஆர்.எஸ்.எஸ் தொடங்கி உள்ளே நுழைந்து ஆட்சி அமைத்து எழுபதுகளில் முதல் தடவையாக பாஜக அரசியலில் வருகிறது. அரசாங்கத்தில் அவர்கள் நுழைந்தவுடன் அனைத்தையும் கண்ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை பொருத்தவரை மாநிலக் கல்வி துறைகளில் மிகப்பெரிய ஊடுறவுகள் வந்திருக்கிறது. வரலாற்றை மாற்றி எழுதி வந்திருக்கிறார்கள். வரலாற்றை மாற்றுவதை அவர்கள் பலகாலமாக முயற்சி செய்து வருகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, திருவள்ளுவருக்கு திடீரென்று காவி கலரை போட்டுவிட்டார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை, வரலாற்றை திரித்து சொல்வது தான். அவர்கள் வடமாநிலங்களில் மத துவேசத்தை நார்மல் செய்து விட்டார்கள். பாஜக காரனுக்கும் ஆர்.எஸ்.எஸ் காரணுக்கும் என்றைக்குமே அவர்களுடைய கருத்தை நேரடியாக சொல்கிற பழக்கமே கிடையாது. எடப்பாடி பழனிசாமி மூலமாகவோ, ஜெயலலிதா மூலமாகவோ தான் வருவார்கள். மற்றவர்களின் தோளில் ஏறி நான் நல்லவன் என்ற கதையைச் சொல்லிதான் வருகிறார்கள்”.

காங்கிரஸ் செய்த தவறுகளை 10 வருடத்தில் நாங்கள் சரி செய்து விட்டோம் என்று கூறுகிறார்களே? 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டிருக்கிறோம் என்றும் கூறுகிறார்களே?

“ஒரு சிலரை மட்டும் பணக்காரர்களாக்கி மொத்த ஊர்களையும் ஏழ்மையாக்கி வைத்திருக்கிறார்களே. கடந்த வருட டேட்டாவை எடுத்துப் பார்த்தால் 62% வேலையாக கொண்டாட்டம் இந்தியாவில் இருக்கிறது என்று கூறுகிறது. இதற்கு யார் காரணம்? அதானியையும், அம்பானியையும் மட்டும் பணக்காரர்களாக உருவாக்கி இந்தியா வளர்ச்சி அடைந்து விட்டது என்று நீங்கள் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை”.

வளர்ச்சி.., வளர்ச்சி...,வேண்டும் மீண்டும் மோடி என்று சொல்லி பிரச்சாரத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் இந்த மாதிரியான பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது?

“அவர்கள் சொல்கிற வளர்ச்சி, அதானியுனுடைய வளர்ச்சியை மட்டும்தான் அவர்கள் சொல்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, வளர்ச்சி அதானி, வளர்ச்சி அம்பானி என்பதுதான் அவர்களது உண்மையான கொள்கை. விவசாயிகள் பிரச்சனையில் இருக்கிறார்கள். விவசாயிகளின் நிலைமை மிகவும் கொடுமையாக இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் இந்தியாவில் தலை விரித்து ஆடுகிறது. சிறுகுறு தொழில்கள் ஜிஎஸ்டி வரியினால் அழிந்து போய்விட்டது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து”.

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பும், பின்பும் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து தி.மு.க.வையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்? களம் எப்படி இருக்கிறது?

“யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதைப் போல தேர்தல் வரும் முன்னே மோடி வருவார் பின்னே என்ற கதைதான். எப்போது தேர்தல் வருமோ, அப்போது தமிழ்நாட்டுக்கு ஓடி வருவார். வந்து வாயில் வடை சுடுவார்.  அனைத்து கதையும் சொல்லிவிட்டு போய்விடுவார். சென்னை வெள்ளம் வந்த போதும் தென்மாநிலங்களில் நிகழ்ந்த வெள்ளத்தின் போதும் என்ன செய்தார்? முதலில் அவர் காது கொடுத்து கேட்டாரா?. அந்தச் சமயத்தில் நிதியமைச்சரை அனுப்புகிறார்கள். நிதியமைச்சருக்கு என்ன தெரியும், பாவம். நிர்மலா சீதாராமனை பார்த்தால் பாவமாக தெரிகிறது” என்று கூறினார்.

Next Story

“காங்கிரஸ் அதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறது” -விருதுநகர் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Congress candidate Manikam Tagore says Congress is fighting for that

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 10 தொகுதியில் ஒன்றான விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு  மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டி பின்வருமாறு...

தேர்தலுக்கும், பிரச்சாரத்திற்கும் உள்ள கால இடைவெளி மிகவும் குறைவான நாளாக இருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுகிறதே?

“அது புதிய வேட்பாளர்களுக்கு இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை வேட்புமனு வாபஸ் வாங்கிய பிறகு கடைசி கட்டமாக 15 நாள்கள் நடக்கும். அந்தப் பிரச்சாரம்தான் உண்மையான தேர்தல் பிரச்சாரம்.‌ அதற்கு முன்னாடி, ஒரு வருடம் கூட பிரச்சாரம் செய்யலாம். பிரதமர் மோடி, ஐந்து வருடமாக பிரச்சாரம் தான் செய்து வருகிறார்”.

விருதுநகர் தொகுதியை முதன் முதலில் பிரிக்கப்பட்ட பிறகு உங்களை எதிர்த்துப் போட்டியிட்ட வைகோவை வீழ்த்தி நீங்கள்தான் வெற்றி பெறுகிறீர்கள். அவரை வீழ்த்தும்போது அந்த வெற்றி உங்களுக்கு எப்படி இருந்தது?

“புரட்சியாளர் வைகோ ஒரு பெரிய பிம்பம். 1993ல் நான் கல்லூரி மாணவனாக, இருந்தபோது அவரது பேச்சை கேட்பதற்காக காத்துக் கொண்டிருப்பேன். அந்தக் காலத்தில் இளைஞர்களுக்கு அவர் மேல் ஒரு பெரிய ஈர்ப்பு. அவரை எதிர்த்து தேர்தலை சந்திப்பது என்பது காலத்தின் கட்டாயமாக இருந்தது என்று தான் நினைக்கிறேன். இது கூட்டணியின் ஒரு பலம். நான் வேட்பாளராக அறிமுகமாகும் போது தி.மு.க.வும், காங்கிரஸும் மிகவும் வலுவாக முன்னெடுத்தது. அனைவரும் சேர்ந்து அந்த வெற்றியைக் கொடுத்தோம். அந்த 2009 தேர்தல் வெற்றி என்பது மிகவும் நெருக்கமான வெற்றியாக இருந்தது. அதன் பிறகு 2019ல் நான் போட்டியிடும் போது எனக்காக வைக்கோ பிரச்சாரம் செய்தார். இந்த முறையும் அவர் எனக்காக பிரச்சாரம் செய்வார் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. வருவேன் என்றும் சொல்லி இருக்கிறார்”.

உங்களை எதிர்த்து ராதிகா சரத்குமார், விஜய பிரபாகரன் போன்ற நட்சத்திர வேட்பாளர்கள் நிற்கிறார்களே. அதை எப்படி பார்க்கிறீர்கள்?

“தமிழ்நாட்டினுடைய பிரச்சனையா என்று தெரியவில்லை.  சினிமாவில் இருக்கக்கூடிய நபர்கள் நின்றால் தான் அது நட்சத்திர தொகுதியாக இருக்கிறது. சினிமா என்பது அவருடைய தொழில், அதை பாராட்ட வேண்டும். அவர்கள் மக்களிடம் என்ன கொள்கையை வைக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அதே போல், ஒரு எம்பியாக இருந்து, அவர்கள் டெல்லி நாடாளுமன்றத்தில் எப்படி குரல் கொடுப்பார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். 

இந்தியாவில் இருக்கக்கூடிய 80 சதவீத மக்களை மட்டுமே பாஜக பார்க்கிறது. மீதமுள்ள 20% சிறுபான்மையினர் மக்களை ஓட்டுரிமை இல்லாமல் ஆக்குவது தான் பாஜகவின் பார்வை. இதுதான் ஆர்.எஸ்.எஸ் உடைய பார்வை. அவர்களைப் பொறுத்தவரை சிறுபான்மையினர் மக்களின் ஓட்டு மட்டும் கிடைக்க வேண்டும். மற்றபடி அவர்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கக் கூடாது என்பதுதான். எடுத்துக்காட்டுக்கு, அவர்களது அமைச்சரவையில் சிறுபான்மையினர் ஒருவர் கூட கிடையாது. இதுவரை அவர்கள் அறிவித்த தேர்தல் வேட்பாளர்களின் ஒருவர் கூட சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர் கிடையாது. 20 சதவீதம் உள்ள சிறுபான்மையினர் மக்கள் உள்ள ஒரு சமூகத்தை மொத்தமாக ஒதுக்கி வைத்து அரசியல் செய்வது ஆர்எஸ்எஸ் மட்டும்தான்.

அவர்களை அரசியல் பூர்வமாகவும் ஒடுக்க வேண்டும், பொருளாதார ரீதியாகவும், அவர்களை ஓரம் கட்ட வேண்டும் என்று பா.ஜ.க நினைக்கிறது. இது எவ்வளவு பெரிய ஆபத்து என்பது ஊரறிந்த விஷயம். அதை பாஜக என்ற முகத்தை வைத்து ஆர்.எஸ்.எஸ் செய்கிறது. அதை செய்து கொண்டிருக்கிறார் மோடி. அந்தக் கட்சி பெயர் பாஜக. அந்தக் கட்சிக்கும் காங்கிரசிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. எங்களை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் சமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது தான் காங்கிரஸுடைய தத்துவம். காங்கிரஸ் அதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், பா.ஜ.கவின் தத்துவம் பெரும் பணக்காரர்களை உருவாக்க வேண்டும் என்பது தான்.

கடந்த 10 வருடத்துக்கு முன்பாக அதானி, அம்பானி போன்றவர்களை நமக்கு யாரென்று தெரியாது. அதானி, பத்து வருடத்திற்கு முன்பு உலகப் பணக்காரர்களை பட்டியலில் 612 வது இடத்தில் இருந்தார். ஆனால், இப்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறார். பத்து வருட காலத்தில் இது மாதிரியான வளர்ச்சி யாருக்கும் நடந்ததில்லை. ஏனென்றால் ஒரு பிரதமரும், அரசும் முழு நேர வேலையாக அதானியை மட்டும் பணக்காரராக உருவாக்க வேண்டும் என்று வேலை செய்கிறது. இந்த அரசினுடைய மாடலே ஒரு சிலரை மட்டும் பணக்காரர்களாக ஆக்க வேண்டும், அந்தப் பணத்தில் மற்ற எல்லா விஷயத்தையும் நம் கட்டுக்குள் வைக்க வேண்டும். சிறுபான்மையினர் சமூகத்தை ஒடுக்க வேண்டும், சிறுபான்மையினர் மொழியான தமிழ் போன்ற மொழியை இந்தி மொழியை போன்ற மொழியை வைத்து அடக்க வேண்டும் இதுதான் அவர்களுடைய கொள்கை. இதுதான் பாஜகவின் தாயாக இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கை” என்று கூறினார்.

 

பேட்டி தொடரும்...