Skip to main content

கோடை வந்தாச்சு... மண்பானைகள் வருமா?  

Published on 07/03/2018 | Edited on 07/03/2018

முன்பெல்லாம் கோடை காலம் வருவதற்கான அறிகுறிகளாக பிப்ரவரி, மார்ச் மாதத்திலிருந்தே தர்பூசணி, கிர்ணி, மோர், நுங்கு, பதநீர், கரும்புச்சாறு, வெள்ளரிக்காய் போன்றவை விற்கும் கடைகள் சாலையோரம் தோன்றும். அந்த வரிசையில் இருந்த இன்னொரு கோடை கால பொருள் மண்பானைகள். ஆனால், எப்பொழுதிலிருந்து என்று தெரியாமல், மண்பானை விற்கும் கடைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டன.

 

Clay potsஒரு சிலர், மண் பானைகளில் குழாயெல்லாம் வைத்து நவீனப்படுத்தி விற்கிறார்கள். நாம் பெரும்பாலும் பார்ப்பது மண்பானைகள் மட்டும்தான். ஆனால், ஒரு காலத்தில் நமது வாழ்க்கையே மண் பாண்டங்களால் சூழப்பட்டிருந்தது என்பது வியப்பைத் தருகிறது. ஒரு காலத்தில் நாட்டில் பெரிய வர்த்தக பாரம்பரியமாகவும் அன்றாட அவசிய பொருளாகவும் இருந்த இந்த மண்பாண்டங்கள் அறிவியலின் நவீன ஆக்கிரமிப்பால், இன்று கைவினை பொருள் கடைகளில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. மனிதனின் அத்தியாவசிய பொருள்களின் இடத்தில் இருந்த மண்பாண்டங்களை இன்று பொங்கல் மற்றும் கார்த்திகை தீபம் போன்ற சீசனில் மட்டும் தேடுகிறோம். இந்த மண்பாண்டங்களின் தொன்மையும் பயன்பாடும் மிகவும் பிரமிக்க வைக்கக்கூடியவை. 
 

 சங்கடை, பானை, சித்திரப்பானை, காய்கறிப்பானை, முட்டி, தோசைக்கல், குளுமை (தானியங்களை பாதுகாக்கும் மட்கலன்), அகல், அடுப்பு, தோண்டி, இரட்டை அடுப்பு, கும்பபானை, கண்பானை, எள்ளெண்ணை சட்டி, உண்டியல், பூச்சாடி, கலையம், மூக்குச்சட்டி, தாழி, கொள்ளிச்சட்டி என மனிதன் பிறப்புமுதல் இறப்பு வரை உள்ள அனைத்தையும் மண்பாண்டங்கள் உள்ளடக்கியுள்ளது. துளி கூட செயற்கை வேதியியல் உட்புகாத ஆரோக்கியமான இந்த மண்பாண்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டோம் என்பதை விட மறந்துவிட்டோம், மறக்கவைக்கப்பட்டுவிட்டோம் என்பதே நிதர்சனமான உண்மை.

 

clay pots


மண்பாண்ட சமையல், நீண்ட ஆரோக்கியத்தையும் ஆயுளையும்  தரக்கூடியது. உணவிற்கு தனிச்சுவையை கூட்டக் கூடிய மண்பாண்டங்கள், உணவை விரைவில் கெடாமல் பார்த்துக்கொள்கின்றன. மண்பாண்டத்தில் சமைக்கும் உணவு எளிதில் செரிமானம் ஆகும், இதில் தயிரை ஊற்றிவைத்தால் எளிதில் புளித்துப் போகாது, மற்றும் தண்ணீரை குளிர்ச்சியாகவும், சுவையாகவும் வைத்துக்கொள்ளும். இதனாலேயே இது ஏழைகளின் குளிர்சாதன பெட்டியாகவும் உள்ளது. மண்பாண்டத்தினால் சமைத்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை வரும் வாய்ப்பு குறைவு என மருத்துவ உலகம் நிரூபித்துள்ளது. நம் தாத்தா பாட்டிகள் எழுபது என்பது வயதிலும் ஆரோக்கியமான நடமாட்டத்துடன் இருப்பதை பார்த்திருக்கலாம். அதற்கு முக்கிய காரணம் மண்பாண்ட சமையல் முறையே ஆகும். இன்று நான்ஸ்டிக் தவாவில், பிளாஸ்டிக் முட்டையில் ஆம்லேட் போட்டுக்கொண்டிருக்கிறோம். பிறகு ஏன் மனிதனின் வாழ்க்கை  60ல் முடியாது? 

 

kuthir

குளுமை
 

மண்பாண்டக் கலையானது வெறும் உணவு தயாரிக்கப் பயன்படும் கொள்கலன்கள் தயாரித்தல் மட்டுமல்ல. இன்றும் நம் ஊர் கோவில்களில் குதிரைசிலை, நாய்சிலை, அம்மன், அய்யனார் சிலைகள் மற்றும் கடம்,  உண்டியல், விளையாட்டு பொருட்கள் போன்றவை மண்பாண்டக் கலையின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும். இராமநாதபுரம் முதுகுளத்தூர் வட்டத்தில் தமிழக அரசு தொல்லியல் துறை நடத்திய அகழ்வாராய்ச்சியில் சங்ககால பானை ஓடுகள் கிடைத்தன. அதில் கொற்றன்-நெடுங்கிள்ளி போன்ற தமிழ் பெயர்கள் பண்டைய தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில மனிதர்கள் இறந்த பிறகு அவர்களது உடலையும் அவர்கள் அதிகம் விரும்பி பயன்படுத்திய பொருட்களையும் தாழி எனும் பெரிய மட்கலனில் போட்டு புதைக்கும் வழக்கம் இருந்து வந்ததற்கான சான்றுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளது. இப்படி சங்க காலத்திலிருந்து  மனித வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த இந்த மண்பாண்டங்கள் இன்று முற்றிலுமாக வழக்கொழிந்து வருகின்றன. 

 

clay horse


 

நவீனமாகிறோம் என்ற பெயரிலும், பயன்பாட்டு வசதிகளின் காரணமாகவும், பல நல்ல விஷயங்கள் நம் வாழ்க்கை முறையிலிருந்து நீங்கிவிட்டன. எழுபதுகளில் புகழ் ஃபேஷனாக இருந்த பெல் பாட்டம், மீண்டும் 2000 ஆண்டு சமயத்தில் வந்தது. ஆடை, அலங்காரம் போன்ற விஷயங்களில் பழமையை திரும்பக் கொண்டு வரும் நாம், வாழ்வு முறையில் அதை செய்ய நினைப்பது குறைவு. சமீப காலமாக இயற்கை வாழ்வு முறை குறித்த விழிப்புணர்வினால், செக்கு எண்ணெய், இயற்கை விவசாயம், தானியங்கள், காப்பர் குடங்கள் என்று கவனம் செலுத்துபவர்கள் மண்பாண்டங்களையும் கவனிக்கலாமே..     

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்

Next Story

மாறி வரும் உணவு முறையும் வாழ்க்கைச் சூழலும் - இளையோருக்கு வழிகாட்டும் ‘ராசி பலன்’ விஷால் சுந்தர்  

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 Vishal Sundar Interview

 

இன்றைய தலைமுறையினருக்கான பல்வேறு கருத்துக்களை 90ஸ் கிட்ஸின் ஆதர்சமான தொகுப்பாளர் விஷால் சுந்தர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அந்தக் காலத்தில் குறைவான அளவிலேயே செய்திகள் நமக்குக் கிடைத்தன. இப்போது செய்திகள் நமக்கு எளிதாகக் கிடைக்கின்றன. நிறைய தகவல்கள் நம்மை வந்து அடைந்துகொண்டே இருப்பதால் நம்முடைய மூளையின் வேலை கடினமாகிறது. டெக்னாலஜி வளர்ந்தாலும் நம் மூளையின் செயல் திறன் அதே அளவில் தான் இருக்கிறது. டெக்னாலஜியிடம் முழுமையாக சரணடைந்து விடாமல் இருக்க வேண்டும். 90ஸ் கிட்ஸ் ஜாலியாக இருப்பதையே மறந்துவிட்டனர். வாழ்க்கையில் தாங்கள் எதையோ இழந்துவிட்டது போலவே எப்போதும் இருக்கின்றனர். 

 

2கே கிட்ஸ் வீட்டில் ரூமை விட்டு வெளியே வருவதே இல்லை. எங்களுடைய இளமைக் காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து வெயிலில் விளையாடுவோம். செல்போனை கொஞ்சம் ஓரமாக வைக்க வேண்டும். ஆனால் தேவையான அளவு டெக்னாலஜியை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். அது எந்த அளவு என்பதை குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தர வேண்டும். இன்று எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் மன அழுத்தம் இருக்கிறது. காதலை வெளிப்படுத்துவதும் காலத்துக்கு ஏற்றவாறு மாறி வருகிறது. எங்களுடைய காலத்தில் லெட்டர் மூலம் காதல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பேஜர், கம்ப்யூட்டர், மொபைல் போன் என்று மாறி வருகிறது.

 

ஒரு காலத்தில் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யும் நிலைமை இருந்தது. இப்போது அடிப்படை வசதிகள் அனைவருக்கும் இருப்பதால், வேலைக்குச் சென்றால் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். தினமும் ஒரே வேலையைச் செய்வதை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. அது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இன்று தேவைகள் அதிகமாகிவிட்டதால் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். 

 

இன்றைய இளைஞர்களுக்கு தொடர்ந்து 8 மணி நேரம் வேலை செய்வது கூட கடினமாக இருக்கிறது. நண்பர்களை நேரில் சந்தித்து விளையாடுவது இன்று மிகவும் குறைந்துவிட்டது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கம்பெனி மாறினால் சம்பளம் வேகமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது மன அழுத்தம் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு தாயையும் இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் என்கிற படம் இதுகுறித்து பேசியது. அதுபோல் இன்றைய இளைஞர்களும் செல்போனைத் தாண்டி வெளியுலகைப் பார்க்கிறார்களா இல்லையா என்கிற சந்தேகம் எழுகிறது. தங்களை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் அவர்கள் வெளியே வர வேண்டும்.

 

இன்று குழந்தைகளை காலை நேர வெயிலில் கூட வெளியே அனுப்ப முடிவதில்லை. உலகத்தில் வெப்பம் இப்போது அதிகமாகியுள்ளது. க்ரீன் கேஸ் அதிகமாகும்போது வெப்பமும் அதிகமாகிறது. தொடர்ந்து மழையே வராமல் இருப்பது, மழை பெய்தால் மிக அதிகமான அளவில் பெய்வது இப்போது அதிகமாக நடக்கிறது. அமெரிக்காவில் மாட்டுக்கறி சேர்த்து தான் சீஸ் பர்கர் செய்யப்படுகிறது. அதற்காகவே வளர்க்கப்படும் மாடுகளிலிருந்து வெளிவரும் மீத்தேன் கேஸ் உலகிற்கே ஆபத்தானது. 

 

சீஸ் பர்கரால் உலகமே அழியக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. காலநிலை மாற்றங்களுக்கு இதுபோன்ற எதிர்பாராத பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிமெண்ட் தயாரிப்பதாலும் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிப்புகளை மேற்கொள்ள அனைத்து துறைகளிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்கள் பல மடங்கு மேலானது. 

 

தேவையில்லாத பொருட்களை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் அப்புறப்படுத்தும் முறை இந்தியாவில் இன்னும் பின்பற்றப்படவில்லை. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் அனைத்து உலக நாடுகளுமே ஈடுபட்டுள்ளன. ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வளர்க்கும்போது அதனால் வெளியேறும் அதிக அளவிலான வாயுக்கள் உலகுக்கு ஆபத்தாக இருக்கின்றன. வாழை மட்டையில் செய்த பைகளைப் பயன்படுத்துவது, வாழை நாரில் உருவாக்கப்பட்ட புடவைகளை உடுத்துவது, டிஸ்யூ பேப்பர் பயன்படுத்துவதைக் குறைப்பது உள்ளிட்ட நம்மால் முடிந்த பங்களிப்பை நாம் வழங்கினால் காலநிலை மாற்றத்தை நம்மால் சரி செய்ய முடியும்.