ஒழுக்கமற்ற மற்றும் ஆபாசமான வீடியோக்கள் உடனடியாக நீக்கப்படும் என டிக்டாக் நிறுவனம் உறுதியளித்ததை தொடர்ந்து, அந்த செயலி மீதான தடையை நீக்கியுள்ளது பாகிஸ்தான்.
சீன செயலியான டிக்டாக் பயனர்களின் தகவல்களை சீனாவிற்கு விற்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, இந்தியாவில் இந்த செயலி தடை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமெரிக்காவிலும் இந்த செயலியை தடை செய்யத்திட்டமிட்டு வருவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்நிலையில், பாகிஸ்தானும் டிக்டாக் செயலிக்கு அண்மையில் தடை விதித்தது. நாகரீகமற்ற மற்றும் ஒழுக்கக்கேடான காணொளிகள் பகிரப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையைப் பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. மேலும், சட்டவிரோத ஆன்லைன் பதிவுகளை உடனடியாக நீக்குவதற்கான வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற டிக்டாக் நிர்வாகம் தவறிவிட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இந்நிலையில், ஒழுக்கமற்ற மற்றும் ஆபாசமான வீடியோக்கள் உடனடியாக நீக்கப்படும் என டிக்டாக் நிறுவனம் உறுதியளித்ததை தொடர்ந்து, அந்த செயலி மீதான தடையை நீக்கியுள்ளது பாகிஸ்தான்.