கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், வாரத்திற்கு மூன்று நாட்கள் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டன் கோரிக்கை வைத்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டில் தற்போதுதான் கரோனா பரவல் குறைந்துள்ளது என்பதால் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டு இயல்புநிலை மெல்லத் திரும்பி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் முக்கிய வருவாய்களில் ஒன்றான சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக புதிய யோசனைகளை முன்வைத்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர் ஜெஸிந்தா. அதன்படி, தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வாரத்தில் 4 நாட்கள் மட்டும் பணி செய்ய அனுமதித்தால், ஊழியர்கள் மற்ற நாட்களில் நியூசிலாந்திற்குள் சுற்றுலாச் செல்வார்கள் என்பதால் அதன் மூலம் சுற்றுலாத்துறை மேம்படும் என்றும், இதுதொடர்பாக நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுடன் பேச வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், வேலை நேரத்தை மாற்றிக் கொள்வது தொடர்பாக கரோனா ஊரடங்கு காலம் நிறைய கற்றுக் கொடுத்துள்ளதால், இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.