புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள வெண்ணாவல்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாலை நேரங்களில் 10, 11, 12 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போது, பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்காக பயன்பாட்டிற்காக உள்ள கழிவறைக்குள் வந்த ஒரு இளைஞர் கழிவறை முன் அமர்ந்து கொண்டு சிறப்பு வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவிகளை நோக்கியும் வகுப்பில் இருந்த ஆசிரியர்களை நோக்கியும் விசில் அடித்தும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
சிறப்பு வகுப்பில் இருந்த ஆசிரியர் அந்த இளைஞரிடம் கேட்கச் சென்றபோது ஆசிரியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதேபோல மற்ற ஆசிரியர்கள், மாணவர்களையும் கொலை மிரட்டலுடன் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் அச்சமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தன் இன்று சனிக்கிழமை ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில்,'வெண்ணாவல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை மாலை நேர வகுப்பில் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்த போது அதே ஊரைச் சேர்ந்த கருப்பையா மகன் முருகேசன் (22) பள்ளியின் உள்ளே உள்ள கழிவறை முகப்பில் நின்று கொண்டு விசில் அடித்தும் தகாதவார்த்தைகளாலும் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களை நோக்கி பேசியுள்ளார்.
இதனைப் பார்த்த பள்ளி ஆசிரியர் திருநாவுக்கரசு கழிவறை முகப்பில் நின்ற முருகேசனை வெளியே செல்லுமாறு கூறிய போது ஆசிரியர் திருநாவுக்கரசையும் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டே சட்டையை பிடித்து இழுத்து அடித்து உதைத்து கொல்லாமல் விடமாட்டேன் என்று கத்திக் கொண்டிருந்தார். சத்தம் கேட்டு தலைமை ஆசிரியரான நானும் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் சென்ற போது எங்களையும் தாக்க முயன்றதுடன் வெளியே வாருங்கள் கொன்று விடுகிறேன் என்று கொலை மிரட்டல் செய்து கொண்டு வெளியே சென்ற முருகேசனை அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் ஏற்றிச் சென்றுவிட்டனர்.
பள்ளிக்குள் வந்து ஆசிரியரைத் தாக்கி மற்ற ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த முருகேசன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியுள்ளார். பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த புகார் குறித்து ஆலங்குடி போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், பள்ளி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் போதே மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைக்குள் முருகேசன் எப்படி வந்தார்? எத்தனை நாட்களாக இப்படி நடக்கிறது. இதனால் மாணவிகளின் பெற்றோர்களான எங்களுக்கு அச்சமாக உள்ளது. ஆகவே உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்கின்றனர் பெற்றோர்கள்.