திருவண்ணாமலை பேகோபுரத் தெருவைச் சேர்ந்த கோபி பைனான்ஸ் தொழில் மற்றும் ஆட்டோ ஓட்டுநராகவும் இருந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகிய நிலையில் அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கோபிக்கு அரசுடையான்பட்டு பகுதியை சேர்ந்த சரண்யா என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கோபிக்கும், மனைவி சரண்யாவிற்கு குடும்பத் தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் கடந்த 4 நாட்களாக சரண்யா மாயமாகியுள்ளார். அவரது பெற்றோர் சரண்யா குறித்து கோபி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரித்துள்ளனர். ஆனால் அவர்கள் சரண்யாவின் பெற்றோருக்கு சரிவரப் பதிலளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சரண்யாவின் பெற்றோர் கோபி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே போலீசார் தன்னிடம் விசாரணை நடத்தவருவதை அறிந்துகொண்ட கோபி வீட்டில் இருந்து தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் கோபியின் தாயார் சிவகாமி டம் விசாரணை நடத்தினர். அதில் சிவகாமி முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்க போலீசாரின் தொடர் விசாரணையால், தனது மகன் கோபி சரண்யாவை கொலைசெய்து துண்டுதுண்டாக வெட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் வீசியதாக தெரிவித்தார்.
இதனிடையே தலைமறைவாக இருந்த கோபி பிடிபட்ட நிலையில் உடல் வீசப்பட்ட இடத்திற்கு போலீசார் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்பு அந்த இடத்தில் இருந்து சரண்யாவின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டனர். பின்னர் மீட்கப்பட்ட பாகங்களை பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கோபி அவரது தாய் சிவகாமி மற்றும் இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய கோபியின் நண்பர் ஒருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.