விருதுநகரில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக நேற்று (10.11.2024) பட்டம்புதூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பொய் பேசி உளறி வருவதாக கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'திமுக சுமார் 525 அறிவிப்பு வெளியிட்டார்கள். அதில் பத்து சதவீத அறிவிப்புகள் கூட நிறைவேற்ற முடியவில்லை. மக்களை ஏமாற்றி கவர்ச்சிகரமான அறிவிப்புகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் முதல்வர் ஸ்டாலின். அதனை மறந்து பேசிக்கொண்டுள்ளார். திட்டங்களை நிறைவேற்றாது குறித்து நேரடி விவாதம் நடத்த நான் தயார் முதல்வர் தயாரா?' என விவாதத்திற்கு அழைத்திருந்தார்.
இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதியிடம் செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமி விவாதத்திற்கு அழைத்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த உதயநிதி ''என்னை கூப்பிட்டால் நான் போவேன். திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைக்காமல் யார் பெயரை வைக்க வேண்டும்? யார் பெயரை வைக்க வேண்டுமோ அவர் பெயரைத்தான் வைக்கிறோம்' என்றார்.