அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய திமுக எம்பி கனிமொழி 'நல்லாட்சியைப் பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது' என குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இந்நிலையில் இன்று ராணிப்பேட்டையில் அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது கனிமொழியின் கருத்து குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், ''கனிமொழிக்கு கவிதை எழுதத் தான் தெரியும் அரசியல் தெரியாது. பொய் சொல்வதற்காகவே பிறந்தவர் கலைஞரும் ஸ்டாலினும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் என்பது அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை அனைவரும் செல்கிறார்கள். 1962-ல் திமுக மாநாடு நடந்த பொழுது ஈ.வி,கே.சம்பத் வெளியேற்றப்படுகிறார். கண்ணதாசன் வெளியேற்றப்படுகிறார். 'இதற்கு கலைஞர் தான் காரணம். பொய் பேசிப்பேசி அரசியலில் குழப்புகிறார். உடம்பு முழுவதும் பொய்' என சம்பத்தே அறிக்கை விட்டார்.
எனவே பொய்மை என்பது ஸ்டாலினுக்குச் சொந்தம். அவருடைய தந்தை கலைஞருக்கு சொந்தம். உதயநிதிக்கு சொந்தமானது. அரசியல் உலகிலேயே அதிகம் பொய் பேசும் அரசியல் கட்சி திமுக தான். போதைப்பொருளைப் பயன்படுத்திய இளைஞர் உடன் பிறந்த தங்கையையே வன்கொடுமை செய்தார் என்று சம்பவம் ராமநாதபுரத்தில் நடந்தது. அந்த நிலையில் தான் தமிழகத்தின் நிலை இருக்கிறது. திமுக ஆட்சி போதைப் பொருளை உற்பத்தி செய்கிறது. போதைப்பொருள் விநியோகத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. சாக்லேட் வடிவத்தில் போதை பொருள் வந்துவிட்டது. அதை விற்பவர்களாக திமுக காரர்கள் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு சமூக வலைத்தளங்களில் வருகிறது. அதை பார்த்தாலே தெரிந்துவிடும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கின் நிலை. கூட்டணி குறித்து தேர்தல் அறிவிப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்பு தான் ஆலோசிப்பார்கள். அப்போதுதான் கூட்டணி குறித்து சொல்ல முடியும்'' என்றார்.