
புதுக்கோட்டையில் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என கூறி இரண்டு லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலங்களில் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என்பது போன்ற பல்வேறு விளம்பரங்கள் இணையதளங்களில் மூலம் உலாவி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் நம்பி பணம் கொடுத்து பலர் ஏமார்ந்த வண்ணமே உள்ளனர். இப்படி இருக்கையில் புதுக்கோட்டையில் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் எனக்கூறி முதுநிலை பட்டதாரி பெண்ணிடம் 2.80 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களை ஆன்லைனில் விற்றால் பணம் தருவதாக கூறி வடமாநில கும்பல் மூலம் இந்த மோசடி நிகழ்த்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மணல்மேல்குடி சேர்ந்த அந்த முதுநிலை பட்டதாரி பெண்ணான சிவரஞ்சனியிடம் ஆன்லைன் மோசடி செய்த வடமாநில கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற ஆன்லைன் மோசடி பற்றி தெரிய வந்தால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.