Skip to main content

கடலூர்: வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்!

Published on 05/01/2020 | Edited on 05/01/2020

கடலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி 40 ஆண்டுகளுக்கு பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 
 

இந்நிலையில் எஸ்.டி பிரிவில் வரக்கூடிய  காட்டு நாயக்கன் சமூகத்தை சார்ந்த மகேஸ்வரி என்பவர் எஸ்.சி  (தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்) என போலியாக சாதி சான்றிதழ் பெற்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதாகவும்,  தாழ்த்தப்பட்டோருக்கான உரிமையை அபகரித்த அவருடைய வெற்றியை ரத்து செய்ய வலியுறுத்தியும், அவருக்கு போலியாக சாதி சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தை சுமார் 300- க்கும் மேற்பட்ட வேப்பூர் காலனி கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

cuddalore district tahsildar office peoples local body election


போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் வேப்பூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், சமாதானம் அடையாத பொதுமக்கள் இரண்டு மணி நேரமாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் இருந்த வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்த முன்வராததால் விரக்தி அடைந்த பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்ளே சென்று வட்டாட்சியரிடம் தங்களுடைய குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையை ஒப்படைக்க சென்றனர்.


அவர்களை அலுவலகத்தின் உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடுத்ததால் பொது மக்கள் ஆத்திரம் அடைந்தனர். பின்னர் அங்கு வந்த வேப்பூர் காவல் ஆய்வாளர் கவிதா, திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் வட்டாட்சியர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடைய கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கோரிக்கை மனுவை தாசில்தார் கமலாவிடம் ஒப்படைத்து விட்டு கலைந்து சென்றனர்.




 

சார்ந்த செய்திகள்