விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகில் உள்ள தொட்டி குடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மனைவி சிவ கலா. இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகளும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ரவீந்திரன் சென்னை குமணன்சாவடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த ரவீந்திரன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏழாம் தேதி இவர்களது மகள் கல்லூரிக்கும், மகன் பள்ளிக்கும் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளனர். அப்போது சிவ கலா மயக்க நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்ததையடுத்து அவரது உடலை சொந்த ஊரான தொட்டி குடிசை கிராமத்திற்குக் கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இந்நிலையில் சிவ கலாவின் மகள் பூந்தமல்லி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வள்ளியிடம் தனது தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் புகார் கொடுத்துள்ளார். புகாரில் தனது தாயின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அவரது புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் வட்டாட்சியர் பாஸ்கரதாஸ் முன்னிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் கொண்ட குழுவினர் புதைக்கப்பட்ட சிவ கலாவின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தனர். இந்தப் பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி மேல் நடவடிக்கை எடுக்க இருப்பதாகப் பூந்தமல்லி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வள்ளி தெரிவித்துள்ளார். புதைக்கப்பட்ட பெண்ணின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்த சம்பவம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.