ஜெயலலிதா கடந்த 2016 தேர்தல் அறிக்கையில் 6,672 மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பேன் என்று தெரிவித்தப்படி ஆட்சிக்கு வந்தபிறகு 500 மதுக்கடைகள் மூட உத்தரவிட்டார். அதைதொடர்ந்து தற்போதைய அரசு கடந்து ஆண்டு பிப்பவரியில் 500 கடைகளை மூடியது. அதற்கு பிறகு நீதிமன்றங்களின் தீர்ப்பின்படி கிட்டதட்ட 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்பொழுது 3,866 கடைகள் உள்ளன என்று அமைச்சர் நேற்று சபையில் தெரிவித்தார். 810 கடைகளை மீண்டும் திறப்பதற்கு காரணம் என்ன? என்று சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் தங்கமணி, 6,700 என்று இருந்த டாஸ்மாக் கடைகள் இன்று 3,862 கடையாக குறைக்கப்பட்டிருக்கிறது. 2002ஆம் ஆண்டிலிருந்து தமிகத்தில் இதுவரை 25 சதவீதம் மதுபான ஆலை யாருடையது? எந்த குடும்பத்தை சார்ந்தது? ஜெயலலிதா மறைந்த பிறகு அவருடைய கொள்கையை ஏற்று இருந்தால் அவர்கள் இங்கே வந்து கேள்வி கேட்பதற்கு தகுதி உள்ளது. ஆனால் அங்கே வருமானம் வர வேண்டும். இங்கே மக்களுக்கு மத்தியில் வந்து ஜெயலலிதா உடைய அரசுக்கு விரோதமாக இந்த அரசு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டுவதா? என்றார்.
இதனைத் தொடர்ந்து வெளிநடப்பு செய்த டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது,
எனக்கு சாராய ஆலை எதுவும் கிடையாது. எனது மனைவி, எனது குழந்தைதான் எனது குடும்பம். வேறு யாரவது உறவினர்கள் வைத்திருந்தால் அந்த ஆலை எல்லாம் எங்கு இருக்கு என்று எனக்கு தெரியாது. 2016ல் ஜெயலலிதா முதல்வரான பிறகு இவர்தானே டாஸ்மாக் மந்திரியாக இருந்தார்? டி.டி.வி. தினகரன் உள்பட ஜெயலலிதாவால் விலக்கப்பட்டவர்கள். ஆகையால் அவர்கள் ஆலையில் இருந்து அரசாங்கத்துக்கு மதுபானங்கள் வாங்க கூடாது என்று சொல்லியிருக்கலாமே?
அண்ணன் தங்கமணி, கட்சியில் ஒதுக்கப்பட்ட, ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்ட டி.டி.வி. தினகரன் துணைபொதுச்செயலாளர் என தேர்தல் ஆணைய்ததில் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? ஆர்,கே.நகர் தொகுதியில் நான் போட்டியிட்டபோது அண்ணன் தங்கமணி உள்பட இந்த மந்திரிகள் ஆட்டோவில் தொத்திக்கொண்டு வந்தவர்கள்.
திடீரென்று இந்த குடும்பம் மது ஆலையை மூடினார்களா என்று கேட்கிறார். என்னிடம் மது ஆலை இருந்தால்தான் நான் மூட முடியும். உறவினர்கள், நண்பர்கள் வைத்திருந்தால் அதுக்கு நான் பொறுப்பாக ஆக முடியுமா? 2011ல் ஜெயலலிதா இவர்கள் பேச்சை கேட்டு கட்சியில் இருந்து எங்களை எடுத்தார்கள். 2016ல் இவர்தானே டாஸ்மாக் மந்திரியாக இருந்தார். அப்ப சொல்ல வேண்டியது தானே? தினகரன் குடும்பத்தை சேர்ந்த தொழிற்சாலையில் இருந்து நாம் சரக்கு வாங்க வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே? அப்புறம் ஏன் வாங்கிகொண்டு இருக்கிறார்.
யார் யார் எந்தெந்த தொழிற்சாலையில் பினாமி பெயரில் பாட்னர் வைத்து இருக்கிறார்கள் என்று கோயம்புத்தூர் பக்கம் போய் கேட்டால் தெரியும். எந்த பொய்யும் நிக்காது. எந்த உண்மையும் நிக்காது. உறுப்பினரின் குடும்பம் என்று சொன்னார். சபையில் அரசியல் மேடை போல் பேசிய அமைச்சருக்கு பதில் வேண்டியது கடமை.
குடும்ப உறுப்பினர் என்று சொன்னால் அதற்கு பதில் சொல்ல எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. பேச அனுமதி தரவில்லை என்றால் அவர் நடுநிலை தவறிவிட்டார் என்று தானே அர்த்தம்.
கேள்வி : நேற்று அமைச்சர் தங்கமணி பதில் அளிக்கும்போது உங்களை குறிப்பிட்டு பேசினார்.
பதில் : யாரு டாஸ்மாக் மணியா?
கேள்வி : உங்கள் ஆதரவாளர்கள் போன் போட்டு மிரட்டியதாக சொல்கிறார்களே?
பதில் : அண்ணன் தங்கமணி, சும்மா பொய்யா சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர்களிடம்தானே காவல்துறை இருக்கிறது. அதை வைத்து கண்டுபிடிக்க வேண்டியதுதானே? தமிழ்நாட்டில் எங்கள் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் ஆட்சியாளர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. டாஸ்மாக் அமைச்சரை டாஸ்மாக் அமைச்சர் என்று தான் சொல்ல முடியும். அவர் கோபத்தில் நிதானம் இல்லாமல் பேசுகிறார். அவர் குற்றவுணர்வில் அம்மாவுக்கு தெரியும் கடவுளுக்கு தெரியும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார். அடுத்த தேர்தல் வரும், அதில் எப்படி ஜெயிக்கிறர் என்று பார்ப்போம். என்னை, இவர் ஒரு தனி உறுப்பினர். இவரால் ஆட்சியை பிடிக்கமுடியாது. சரி அப்படியே வைத்துக்கொள்வோம். இந்த தனி உறுப்பினருக்கு ஏன் ஒரு மே தின கூட்டம் நடத்த கூட இந்த காவல் துறை அனுமதிக்கவில்லை. இவ்வாறு கூறினார்.