Skip to main content

பா.ஜ.க தொடுத்துள்ள யுத்தத்தை தமிழக மக்களோடு நின்று எதிர்கொள்வோம்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

Published on 07/03/2018 | Edited on 07/03/2018


 

திராவிட பாரம்பரியத்திற்கு எதிராக பா.ஜ.க தொடுத்துள்ள யுத்தத்தை தமிழக மக்களோடு நின்று பாப்புலர் ஃப்ரண்ட் எதிர்கொள்ளும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் A. ஹாலித் முஹம்மது தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 
 

திராவிட கொள்கையின் பாரம்பரியமான தமிழக மண்ணில் எப்படியாவது கால் பதித்து விட வேண்டும் என்ற கனவுடன் பாரதிய ஜனதா கட்சி பல்வேறு பிரிவினை வாத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஒற்றுமையாக வாழும் மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்துதல், கலவரம் செய்தல், வதந்திகளை பரப்புதல், சமூகங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்துதல் போன்ற கீழ்த்தரமான யுக்திகள் மூலம் பா.ஜ.க தனது அரசியல் இருப்பிடத்தை வட மாநிலங்களில் தக்கவைத்து வருகின்றது. 
 

இதே போன்ற பிரிவினை வாத கலவர முயற்சிகளை RSS மற்றும் பா.ஜ.க தமிழகத்தில் தற்போது மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதிதான் H.ராஜா போன்றவர்கள் பேசிவரும் பிரிவினைவாத கருத்துக்கள். இவர்கள் மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்த மாட்டுக்கறியை பயன்படுத்தினார்கள். லவ் ஜிஹாத் என்றார்கள், கர்வாப்ஸி என்றார்கள், சில நாட்களுக்கு முன்பாக ஆண்டாள் தேவைப்பட்டார். தற்போது பெரியார் தேவைப்படுகின்றார். மேல்ஜாதி ஆதிக்க சக்தியான பா.ஜ.க தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென்றால் திராவிட பாரம்பரியத்தை வீழ்த்தாமல் முடியாது என்பதை விளங்கி கொண்ட பா.ஜ.க தற்போது H.ராஜா போன்ற அடிவருடிகளை வைத்து திராவிடர்களுக்கு எதிரான யுத்தத்தை தொடுத்துள்ளது. 
 

பெரியார் சிலையை உடைப்போம் என H.ராஜா கூறியுள்ள கருத்தை பெரியார் சிலையோடு நாம் சுருக்கி விடக் கூடாது. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் எடுத்தியம்பிய தமிழர்களின் திராவிட கொள்கைக்கு எதிரான யுத்தமாகத்தான் நாம் இதை பார்க்க வேண்டும். வேலூர் திருப்பத்தூரில் பெரியார் சிலையை பா.ஜ.க-வினர் சேதப்படுத்தியுள்ள சம்பவத்தை இந்த பின்னணியில் நாம் பார்க்க வேண்டும். 
 

திராவிடத்திற்கு எதிராக RSS மற்றும் பா.ஜ.க தொடுத்துள்ள யுத்தத்தை தமிழக மக்களோடு நின்று பாப்புலர் ஃப்ரண்ட் களத்தில் எதிர்கொள்ளும். தமிழகத்தில் தொடர்ந்து பதட்டத்தையும், கலவரத்தையும் ஏற்படுத்தும் வகையில் பேசிவரும் H.ராஜா மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்