Skip to main content

ஒபிஎஸ் நடத்திய கும்பாபிஷேகத்தில் நகைகளை பறிகொடுத்த 9 பெண்கள்!

Published on 26/06/2018 | Edited on 26/06/2018
ops

 

தேனி மாவட்டத்தில் உள்ள ஒபிஎஸ்சின் சொந்த ஊரான  பெரியகுளத்தில் இருக்கும்  பெரியகோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் வெகு விமர்சையிக நடைபெற்றது.
 இக் கோவில்  ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோவிலை, துணைமுதல்வரும், பெரியகுளத்தாருமான ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த செலவில் பராமரித்து, ராஜகோபுரம் எழுப்பி, இன்று கும்பாபிஷேகம் நடத்தினார். இந்த கும்பாபிஷேகம் விழாவிற்கு தேனி மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இருந்தனர்.  இப்படி  வந்த  பக்தர்கள்  கும்பாபிஷேகத்தை பார்த்து விட்டு ஒபிஎஸ்  ஏற்பாடு செய்து இருந்த  அன்னதானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  அன்னதானம்  சாப்பிட்டனர்.

 

இந்த விழாவுக்காக  நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்படி இருந்தும் கூட திருடர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு   கோவிலுக்கு வந்த பெண்களை குறிவைத்து செயின் திருட்டில் ஈடுபட்டனர்.  செயின் திருட்டினால் பாதிக்கப்பட்ட சரஸ்வதி, பாண்டியம்மாள், விஜயா, மணிமேகலை, பிச்சையம்மாள் உட்பட 9 பெண்கள் பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் புகார் தெரித்துள்ளனர். திருடப்பட்டது மொத்தம் 70 பவுன் தங்க நகை என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

ops1

 

 "எப்படி நகையை அடித்தார்கள் என்றே தெரியவில்லை. கூட்டத்தில் எங்களுக்கே தெரியாமல் நகையை திருடியுள்ளனர். எல்லாம் தாலிச்செயின். புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேசன் வந்தோம். உங்கள் நகையை நீங்கள் தான் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தென்கரை இன்ஸ்பெக்டர் மதனகலா தெரிவிக்கிறார்" என்று ஆதங்கப்பட்டார் நகையை பறிகொடுத்த பிச்சையம்மாள்.

 

 தண்ணீர் பீச்சியடிக்கும் போது நகை திருடப்பட்டதாக சிலர் கூறுகின்றனர். பலர் தங்களது நகைகளை காணவில்லை எனக்கூறி காவல்நிலையத்திற்கு படையெடுத்துவருகின்றனர். "திருவிழாவிற்கு வந்திருக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளனவா என்பதை பார்க்காமல், ஒபிஎஸ்சை கவனித்துக் கொள்வதிலேயே காக்கிகள்  கவனமாக இருந்தனர் பெரியகுளம் டி.எஸ்.பி ஆறுமுகம் மற்றும் ஆய்வாளர் மதனகலா. இப்படி இருந்தால் திருட்டு நடக்காமல் இருக்குமா?" என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

ops3

 

இது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, "கோவிலில் பொறுத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை வைத்து திருடியது யார் என்பதை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம்" என்றனர். ஒரு குறையும் இல்லாமல் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்ட ஓ.பன்னீர்செல்வம் இந்த செய்தியை கேட்டு  மனம் நொந்து போய் , உடனே எஸ்.பி.யை செல் மூலம் தொடர்பு கொண்ட ஒபிஎஸ்  உடனே பெண்களிடம் நகை திருடிய கும்பலை கண்டு பிடித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நகைகள் ஏற்பாடு  செய்யவேண்டும்  என அதிரடி  உத்திரவு பிறப்பித்துள்ளார். அதை தொடந்து எஸ்.பி.யும் திருட்டு கும்பலை பிடிக்க  தனிப்படை  அமைத்து  தேடி வருகிறார்.

சார்ந்த செய்திகள்