Skip to main content

“மது புட்டிகளில் எச்சரிக்கை வாசகங்கள், படங்கள் அச்சிட வேண்டும்” - அன்புமணி

Published on 04/01/2025 | Edited on 04/01/2025
Warning messages and pictures should be printed on liquor bottles says Anbumani

தமிழ்நாட்டில் மது அருந்துபவர்களுக்கு  2 ஆண்டுகளில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது என பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மது அருந்துவதால்  குறைந்தது 7 வகையான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும்,  இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுப்புட்டிகள் மீது எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அரசுக்கு அந்நாட்டின் தலைமை மருத்துவர் விவேக் மூர்த்தி  அலுவலகம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை அமெரிக்காவில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.

தமிழ்நாட்டில் இதே கருத்தை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ‘‘ஆல்கஹால் மற்றும் சுகாதார நிலைமை குறித்த உலக அறிக்கை -2014’’ என்ற தலைப்பில் பத்தாண்டுகளுக்கு முன் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் மது குடிப்பதால் 60 வகை நோய்கள் தாக்கும் என இதுவரைக் கருதப்பட்டு வந்த  நிலையில், இப்போது 200 வகை நோய்கள் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் இழைநார் வளர்ச்சி (liver cirrhosis), சிலவகை புற்றுநோய்கள் ஏற்படுவதுடன், நிமோனியா, காசநோய் போன்றவையும் எளிதில் தொற்றுவதாகவும்  அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போதிலிருந்தே மதுவின் இந்த தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், தமிழகத்தை ஆண்ட அரசுகள் இந்த யோசனையை கண்டுகொள்ளவில்லை.

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் மதுவுடன் ஒப்பிடும் போது  தமிழ்நாட்டில்  விற்பனை செய்யப்படும் மது வகைகள் பல மடங்கு தரம் குறைந்தவை. மது குடிக்கும் அளவும் தமிழ்நாட்டில் மிகவும் அதிகம். இவற்றை வைத்துப் பார்க்கும் போது அமெரிக்காவில் மது அருந்துபவர்களுக்கு 10 ஆண்டுகளில் புற்றுநோய் ஏற்படும் என்றால், தமிழ்நாட்டில் மது அருந்துபவர்களுக்கு  2 ஆண்டுகளில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. அதனால் தான் தமிழ்நாட்டில் இத்தகைய விழிப்புணர்வு வாசகங்கள் மதுப்புட்டியில் அச்சிடப்பட வேண்டும் என்று  பாமக வலியுறுத்துகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் பதவி வகித்த போது தான் புகையிலைப் பொருள்கள் மீது எச்சரிக்கை வாசகங்களை அச்சிடும் முறை கடுமையாக எதிர்ப்புகளையும் மீறி நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் பயனாக  புகையிலைப் பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு  இருப்பதுடன் புகையிலைப் பழக்கமும் கணிசமாக குறைந்துள்ளது. இதேபோல், மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

உலக அளவில் இப்போது தென்கொரியாவில் மட்டும் தான் மதுப்புட்டிகள் மீது எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடும் முறை நடைமுறையில் உள்ளது. அயர்லாந்து நாட்டிலும், அமெரிக்காவிலும் இத்தகைய முறை விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கிறது.  மதுப்புட்டிகளில் எச்சரிக்கை வாசகங்களை அச்சிடும் அதிகாரம் மாநில அரசுக்கே  உள்ளது. எனவே, மது குடித்தால் பல வகை புற்றுநோய்கள் உள்ளிட்ட 200 வகையான நோய்கள் ஏற்படும் என்ற வாசகத்தையும், எச்சரிக்கைப் படத்தையும் மதுப்புட்டிகளில் பரப்பில் 80% அளவுக்கு அச்சிடும் முறையை  தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்