Skip to main content

ஆளுநரின் மறுப்பும்; திமுகவின் போராட்டமும்

Published on 06/01/2025 | Edited on 06/01/2025
Refusal of Governor; DMK's struggle

2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் என அனைவரும் சட்டப்பேரவை வளாகத்தில் கூடினர். சட்டப்பேரவைக்குள் வந்த அதிமுக எம்எல்ஏக்கள் 'யார் அந்த சார்'? என்ற பேஜ் அணிந்து கொண்டு வருகை புரிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அதேபோல் வந்திருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து புறப்பட்டுச் சென்றார்.

ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் 'அரசியல் சாசனம், தேசிய கீதம் அவமதிப்புக்கு துணை போக முடியாது என ஆளுநர் வெளியேறியுள்ளார். தேசிய கீதம் பாட வேண்டும் என முதலமைச்சர் மற்றும் சபாநாயகரிடம் ஆளுநர் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடன் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். ஆனால் தேசிய கீதம் பாடப்படவில்லை. தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது' என ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த விளக்கம் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு டேக் செய்யப்பட்டுள்ளது. பேரவையிலிருந்து ஆளுநர் வெளியேறியதால் அவரது உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். தொடர்ந்து அவை தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

Refusal of Governor; DMK's struggle

தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் புறக்கணித்ததாகவும் அவமதிப்பு செய்ததாகவும் மறுபுறம் ஆளுநர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்தநிலையில் ஆளுநர் மாளிகை அது குறித்து விளக்கம் அளித்துள்ளது. 'ஒவ்வொரு மாநில பேரவையிலும் ஆளுநர் பேசும்போது தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. ஆளுநர் உரைக்கு முன்பு மற்றும் முடிந்த பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படும். முன்பே பலமுறை வலித்து வலியுறுத்தியும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது துரதிஷ்டவசமானது. அரசமைப்பின் கடமைகளை பின்பற்ற வேண்டியது ஆளுநரின் கடமை. தமிழ் கலாச்சாரத்தின் மீது அன்பு மரியாதை இருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து மீது எப்பொழுதும் ஆளுநருக்கு மரியாதை உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாக ஆளுநரை கண்டித்து திமுக தலைமை நாளை (07/01/2025) போராட்டம் அறிவித்துள்ளது. மாவட்ட தலைநகரங்களில் நாளை காலை 10 மணிக்கு திமுக சார்பில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்