
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வரும் நிலையில், இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக நீலகிரியில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த கனமழை காரணமாகக் கீழ் கோத்தகிரியில் கடந்த 24 மணி நேரத்தில் 23 சென்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மிக மிகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஈரோட்டில் நம்பியூரிலும், திருப்பூர் மாவட்டம் அவிநாசியிலும் தலா 12 சென்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. அதேபோல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 9.4 சென்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் 9 சென்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. நீலகிரியின் கீழ் கோத்தகிரியில் பெய்த மிகக் கனமழை காரணமாகப் பல்வேறு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் கிராமத்தில் உள்ள பள்ளிக் கட்டடம் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இடிந்து கீழே விழுந்திருக்கிறது. கீழ் கோத்தகிரியில் பல்வேறு கிராமங்களுக்குச் செல்லக்கூடிய மண் சாலைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் கோத்தகிரிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து இன்று 23 சென்டிமீட்டர் என அதிக மழை முதல்முறையாகப் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.