Skip to main content

10க்கும் மேற்பட்ட முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளின் துறைகள் மாற்றம்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Transfer of department for more than 10 key IAS officers

பத்துக்கும் மேற்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் உத்தரவின்படி தமிழக மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக இருந்த மணிவாசகம் நீர்வளத்துறை செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.  

பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த சந்திரமோகன் தற்போது சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வித்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீர்வளத் துறை செயலாளராக இருந்த சந்திப் சக்சேனா செய்தி மற்றும் அச்சு காகிதத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராக மங்கத் ராம் ஷர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்படியாக பத்துக்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'மன்னிப்புக்கு நிபந்தனை'-அடுத்த வீடியோ வெளியிடும் இர்ஃபான்

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
nn

பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை துபாயில் மருத்துவ பரிசோதனை செய்து கண்டறிந்துள்ளார். அத்தோடு தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் இதுதான் என்று அவரது யூடியூப் சேனலில் சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்த வீடியோவை இதுவரை சுமார் 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

குழந்தையின் பாலினத்தை பகிரங்கமாக அறிவித்த இர்ஃபானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த இர்பான் மீது சுகாதாரத்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து வெளியில் சொல்பவர்கள் மீது தமிழகத்தில் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது என்ற நிலையில் இர்பானுக்கு சிக்கல் அதிகரித்தது. தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாக இர்பான் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கருவில் இருக்கும் குழந்தை பாலினத்தை யூடியூப் வீடியோவில் அறிவித்ததற்கு மன்னிப்பு கோரியுள்ளார் யூடியூபர் இர்ஃபான். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அலுவலகத்தில் இதற்கான மன்னிப்பு கடிதத்தை அவர் வழங்கி உள்ளார். இர்ஃபானின் மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்க நிபந்தனை வைத்துள்ளனர். சிசுக்கலைப்பு குறித்த விழிப்புணர்வு காணொளியை வெளியிடுவதாகவும் அதிகாரிகளிடம்  இர்ஃபான் உறுதி அளித்துள்ளார்.

Next Story

“பூர்வ குடிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வனத்துறை” - டி.டி.வி.தினகரன் கண்டனம்

Published on 11/05/2024 | Edited on 11/05/2024
TTV Dhinakaran Condemns Forest Officer For Forcibly Evicting Aborigines

வனப்பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “பூர்வகுடிகளுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் செய்து தர வேண்டும். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள எடத்திட்டு, வேப்பமரத்து, கோம்பு ஆகிய வனப்பகுதிகளில் வசித்து வரும் பூர்வகுடிகளை வனத்துறையினர் துன்புறுத்தி, வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

வனப்பகுதிகளில் தங்கி கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் பூர்வகுடிகளின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, உடமைகளை உடைத்தெறிந்திருப்பதுடன், குடியிருப்புவாசிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்றியிருக்கும் வனத்துறையின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

தலைமுறை, தலைமுறைகளாக வனப்பகுதிகளில் வசித்து வரும் பூர்வகுடிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தவறிய திமுக அரசு, வனத்துறையின் மூலம் வன்முறையை கையாண்டு பூர்வகுடிகளை அப்புறப்படுத்தியிருப்பது தமிழக அரசின் அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது.

எனவே, வனப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் பூர்வகுடிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில், அவர்கள் விரும்பும் வனப்பகுதியிலேயே வசிப்பதற்கு தேவையான மாற்று ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டும் என வனத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.