“Farewell...” - Ravindra Jadeja Announces Retirement!

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (29.06.2024) நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 176 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்களையும், அக்சர் படேல் 47 ரன்களும், ஷிவம் துபே 27 ரன்களும் அடித்தனர். அதன் பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்திய அணியில் ஹர்திக் மூன்று விக்கெட்டுகளையும், பும்பரா, ஹர்ஷித் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Advertisment

இந்த வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அதேநேரம் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தனர். விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

Advertisment

இந்நிலையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதையடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்துள்ளார். முன்னதாக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர். இத்தகைய சூழலில் தான் ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ரவீந்திர ஜடேஜா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நன்றி நிரம்பிய இதயத்துடன் டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். டி20 உலகக் கோப்பையை வெல்வது என்ற கனவு நனவானது. இது எனது சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.