Skip to main content

பிரதமர் மோடி வருகை: திருச்சியில் எந்தெந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம்

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Traffic change in Trichy tomorrow due to Prime Minister Modi's visit

பிரதமர் மோடி வருகையையொட்டி, திருச்சியில் நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் பகல் 2 மணி வரை வாகனப் போக்குவரத்தில் தாற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  மதுரை, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்.

அதேபோல சென்னை, பெரம்பலூர் மார்க்கத்திலிருந்து திண்டுக்கல், மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து துறையூர், முசிறி,குளித்தலை,மணப்பாறை,வையம்பட்டி,திண்டுக்கல் வழியாக செல்ல வேண்டும். சேலம், நாமக்கல் மார்க்கத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் முசிறி, குளித்தலை, மணப்பாறை, விராலிமலை வழியாக சென்று வரவேண்டும். கோவை, கரூர் மார்க்கத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் குளித்தலையிலிருந்து மணப்பாறை, விராலிமலை வழியாக சென்று வரவேண்டும்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர் புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மன்னார்புரம், எடமலைப்பட்டி புதூர் சோதனை சாவடி( எண்: 2) திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலை வழியாக சென்று வர வேண்டும். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை மற்றும் சேலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கன்டோன்மென்ட் எம்ஜிஆர் சிலை, சாஸ்திரிசாலை, கரூர் புறவழிச்சாலை, அண்ணாசிலை, ஓயாமரி சாலை வழியாக சென்னை புறவழிச்சாலையை அடைந்து செல்ல வேண்டும். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கடலூர், அரியலூர், பெரம்பலூர், சமயபுரம், லால்குடி, மண்ணச்சநல்லூர், குணசீலம் செல்லும் பேருந்துகள் அண்ணாசிலை, ஓயாமரி சாலை சென்னை புறவழிச்சாலை வழியாக செல்ல வேண்டும். 

நம்பர் 1 டோல்கேட்டிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரும் அனைத்து வாகனங்களும் திருவானைக்கா டிரங்க் ரோட்டை தவிர்த்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் அனைத்து நகர பேருந்துகளும் மாம்பழச்சாலை, திருவானைக்காவல் வழியாக அழகிரிபுரம் வரை சென்று மீண்டும் அதே வழியில் வர வேண்டும்.

மேலும் பிரதமரை வரவேற்கும் விதமாக திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலைக்கு வரும் அரசியல் கட்சியினர் வாகனங்கள் திருவானைக்காவல் டிரங்ரோடு, சோதனைச்சாவடி (எண் 6) அருகில் கட்சியினரை இறக்கிவிட்டு நெல்சன்சாலை, ஆண்டவன் கல்லூரி மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். பஞ்சக்கரை சாலை ( ஹோட்டல் ஸ்ரீ) சந்திப்பு முதல் முருகன் கோவில், வடக்கு வாசல், அனைத்து உத்திர மற்றும் சித்திர வீதிகள், அடையவளஞ்சான் வீதிகளில் எந்த வாகனங்களும செல்லவோ, நிறுத்தவோ அனுமதி இல்லை. இத்தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர்  மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.