Skip to main content

மத்திய அரசின் பல்வேறு சட்டங்களை எதிர்த்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்! 

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

Trade unions struggle  against various federal laws!

 

மத்திய அரசின் பல்வேறு சட்டங்களை எதிர்த்தும், அவற்றை ரத்து செய்யக் கோரியும் அனைத்து தொழிற் சங்கங்கள், மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் 26ஆம் தேதி நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக, காங்கிரஸ், கம்யூன்ஸ்ட் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் என மொத்தம் 10 தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து இப்போராட்டத்தை நடத்தின.

 

அந்த வகையில், ஈரோட்டில் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் ஐ.என்.டி.யூ.சி. மாவட்டத் தலைவர் தங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து நம்மிடம் பேசிய ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்க மாநிலச் செயலாளர் சின்னசாமி, “பல ஆண்டுகளாக இந்திய தொழிலாளர்கள், பல்வேறு தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற சட்டங்களைப் பாஜக மோடி அரசு வந்தவுடன் 44 தொழிலாளர் சட்டங்களை வெறும் நான்கு தொகுப்புகளாக மாற்றிவிட்டனர். அதை ரத்து செய்ய வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களோடு மின்சார திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும். தேசிய பணமாக்குதல் திட்டம் உள்ளிட்ட எந்தப் பெயராலும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்க கூடாது.

 

வருமானவரி கட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் கரோனா கால நிவாரனமாக மாதம் ஒன்றுக்கு ரூ. 7,500 வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதோடு, அதை நகரப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். கட்டுமான, உடலுழைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் விரிவான சமூகப் பாதுகாப்பு திட்டங்களை அமலாக்க வேண்டும். ஏற்கனவே இயங்குகிற மாநில நலவாரியங்களை மத்திய அரசு சீர்குலைக்க கூடாது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியைக் குறைத்து, அனைத்து பொருட்களின் விலையேற்றத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.

 

விவசாயம், கல்வி, மருத்துவம், மற்றும் அத்தியாவசிய மக்கள் பயன்பாட்டுத் துறைகளில் பொது முதலீட்டை அதிகப்படுத்தி பணக்காரர்கள், செல்வவளம் மிக்கவர்களிடம் இருந்து சொத்து வரி வசூலித்து, இதற்கான நிதியைத் திரட்டி, தேசிய பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்டி புனர்நிர்மாணம் செய்திடல் வேண்டும். கரோனா பெருந்தொற்று காலத்தில் அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பும், காப்பீடு வசதிகளும் வழங்கிட வேண்டும். அங்கன்வாடி, ஆஷா, சத்துணவு மற்றும் இதர திட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தையும், சமூகப் பாதுகாப்பையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். என 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திதான் தேசிய அளவில் தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து பாஜக அரசுக்கு எதிராக தொடர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறோம்” என்றார்.

 

ஆர்ப்பாட்டம், தர்ணா, முற்றுகை என தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது மத்திய அரசுக்கு எதிராக இரண்டு நாட்கள் இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

 


இந்தப் ஆர்ப்பாட்டத்தில், ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., எல்.பி.எப்., எம்.எல்.எப்., எல்.டி.யூ.சி., டி.டி.எஸ்.எப்., தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தற்சார்பு விவசாயிகள் சங்கம், திமுக விவசாய அணி ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வந்த சிறுத்தை; கூண்டு வைத்துப் பிடித்த வனத்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
leopard caught in a cage while hunting cattle near Thalavady

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாயத் தோட்டத்தில் புகுந்து ஆடு மாடுகளைக் கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று தாளவாடி அடுத்த   மல்குத்திபுரம் தொட்டியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரின் 6 ஆடுகளையும், 2கன்று குட்டிகள், 20 வான்கோழி, 5 காவல் நாய் ஆகியவற்றை வேட்டையாடி கொன்றது. இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள கால்நடைகளையும் அந்தச் சிறுத்தை கொன்று  வந்தது.  அதே போல் கடந்த 3 நாட்கள் முன்பு அதே பகுதியில் உள்ள பாக்கியலட்சுமி என்பவரின் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி மக்களை அச்சுறுத்தி வரும்  சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு  கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு பாக்கியலட்சுமி தோட்டத்தில் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். கூண்டின் ஒரு புறம் காவல் நாயை கட்டி வைத்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அந்தப் பகுதிக்கு வந்த சிறுத்தை  கூண்டில் இருந்த நாயை வேட்டையாட கூண்டுக்குள் சென்றபோது கூண்டில் சிக்கி உள்ளது. இன்று காலை கூண்டில் இருந்து பயங்கரமாக சத்தம் வந்ததால் அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கியிருப்பது தெரிய வந்தது.

இந்தத் தகவல் காட்டு தீ போல் பரவியதால் சிறிது நேரத்தில் பாக்கியலட்சுமி தோட்டத்திற்கு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் இது குறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் லாரியில் வந்து கூண்டுடன் சிக்கிய சிறுத்தையை லாரியில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு செல்ல அழைத்து சென்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதமாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.