
சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாகச் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், அதேபோல் அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சார்பில் சோதனை நடைபெற்றது. இதையடுத்து இந்த சோதனையின் மூலம் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
இச்செய்தி தமிழக அரசியலில் புயலை கிளப்பிய நிலையில் எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், செந்தில்குமார் அடங்கிய அமர்வதற்கு முன்பு விசாரணையில் இருந்த நிலையில் நீதிபதிகள் இருவரும் வழக்கில் இருந்து திடீரென விலகினர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் ராஜசேகர் அடங்கிய புதிய நீதிபதிகள் தலைமையில் தற்போது விசாரணையில் இருக்கிறது.
இந்நிலையில் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை,உயர்நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.