Skip to main content

ஹீரோவாக நினைத்துக்கொண்டு மக்களிடம் லத்தியை சுழட்டும் இன்ஸ் முனிசேகர்; மக்கள் போராட்டத்தால் காத்திருப்பு பட்டியலுக்கு சென்றார்

Published on 21/04/2019 | Edited on 21/04/2019

 

பொது மக்கள் கூட்டமாக நின்றாலோ, பெண்கள் கூட்டமாக நின்றாலோ தன்னை ஹீரோவாக நினைத்துக்கொண்டு கூடியிருக்கும் மக்களிடம் லத்தியை சுழட்டி வாங்கிக்கட்டிக்கொள்வது இன்ஸ்பெக்டர் முனிசேகரின் வாடிக்கையாகவே மாறிவிட்டது. அந்தவகையில் நீடாமங்கலம் அருகே வாக்குச்சாவடி அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்துவந்த வயதானவர்கள் மீது தடியடி நடத்தி காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றுள்ளார்.

 

m

 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பழங்களத்தூர் கிராமத்தில் உள்ள இருபத்தைந்தாவது வாக்குச்சாவடியில் மற்ற வாக்குச்சாவடிகளை போல் இல்லாமல் மிகவும் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. அந்த வாக்குச்சாவடிக்கு அருகில் உள்ள டீக்கடையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வழக்கம்போலவே டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் முனிசேகர் போலீஸ் படையுடன் வந்தவர், கூட்டத்தைக்கண்டதும் ஏன் இங்கு கூட்டமாக நிற்கறீங்க என்பதை கேட்டுக்கொண்டே தடியடி நடத்த உத்தரவிட்டு தடியடி நடத்தினர். பொது மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதில் வயதானவர்களும், சிறுவர்களும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஆட்சியம்மாள், சரவணகுமார் என்பவரும் நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஷ்வா என்கிற சிறுவன் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

 

 இந்த சம்பவத்தால் அங்கு சுமார் 30 நிமிடம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.  இந்த நிலையில் தடியடி நடத்திய இன்ஸ்பெக்டர் முனிசேகரை காத்திருப்போர் பட்டியலில் மாற்றம் செய்துள்ளார் மாவட்ட எஸ்,பி துரை.

 

m

 

முனிசேகர் ராஜஸ்தானை சேர்ந்த திருடர்களை பிடிக்க சென்றபோது ஆய்வாளர் பெரியபாண்டி  துப்பாக்கியால் சுட்டு கொன்ற வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவரது நடவடிக்கை குறித்து காக்கிகளே கதை, கதையாக கூறுகின்றனர், அவர்கள், " முனிசேகர் ராஜஸ்தான் பிரச்சினையில் சிக்கியவர், பிறகு காத்திருப்பு பட்டியலில் இருந்து சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் அனைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக அதிமுக புள்ளி ஒருவரின் உதவியோடு அங்குவந்தார். அங்கு  பெரிய மணல் மாபியாக்களிடம்  கட்டுக்கட்டாக பணத்தை வாங்கிக்கொண்டு கரையோரம் உள்ள அப்பாவி மக்கள் நடமாடினாலே லத்தியால் அடித்து துன்புறுத்தினார்.

 

 அதே பகுதியில் உள்ள பட்டவிளாகத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஜான்சன் என்பவர் தனது அண்ணனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதை அந்த வழியாக சென்ற முனிசேகர் பார்த்துவிட்டு மனநலம் பாதிக்கப்பட்டவரை நட்டநடு வீதியில் இரண்டு காக்கிகளை பிடிக்கவைத்து அடித்து உதைத்த சம்பவம் அந்த பகுதியில் இன்று வரை மாறாத வடுவாக இருக்கிறது. அந்த சம்பவத்தால் இடம் மாற்றப்பட்டார். இங்கு வந்து வழக்கம் போல்  டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்தி எதிர்ப்பை சம்பாதித்துள்ளார்." என்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்