Skip to main content

வாலிபால் போட்டி.. தேசிய அளவில் சாதித்த மாணவிக்கு திலகமிட்டு வரவேற்பு

Published on 02/05/2019 | Edited on 03/05/2019

 

சமீப காலமாக கிராமத்து ஏழை மாணவிகள் படிப்பில் மட்டுமின்றி விளையாட்டிலும் சாதித்து வருகிறார்கள். அவர்களுக்கு போதிய ஊக்கமும் பயிற்சியும் கிடைக்கும் போது தொடர்ந்து சாதிப்பார்கள்.

 

n

 

 இந்த நிலையில் தான்  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள நாடாகாடு முனிக்கோயில் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான நீலகண்டன் - சரஸ்வதி தம்பதிகளின் மகள் நிஷா (14) வின் சாதனையை பார்த்து கிராமமே திலகமிட்டு வரவேற்ற இருக்கிறது.  எட்டாம் வகுப்பு வரை, பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த நிஷா அடுத்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதால், அதன் பிறகு 10 ஆம் வகுப்பை ஈரோடு மாவட்டம் நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளியில் படித்து வருகிறார். 

 

கடந்த ஏப்ரல் 21 முதல் 26 ஆம் தேதி வரை மகாராஷ்டிர மாநிலம் கோபர்கான் ஷீரடியில் 27 ஆவது மினி நேஷனல் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதிலிருந்தும் அனைத்து மாநிலங்களிலிருந்தும், யூனியன் பிரதேசங்களில் இருந்தும் 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதில்  கலந்து கொண்ட தமிழக அணி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை பெற்றது. இந்த அணியில்  வாலிபால் விளையாட்டு வீராங்கனையான நிஷா துணைக் கேப்டனாக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார். இவர் பேராவூரணி எஸ்.எம்.என் ஸ்போர்ட்ஸ் அகாடெமி மூலம் தொடர்ந்து வாலிபால் பயிற்சி பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தேசிய அளவில் வெற்றி பெற்று சொந்த ஊருக்கு திரும்பிய துணை கேபடன் மாணவி நிஷாவுக்கு அவரை உருவாக்கிய பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை அன்று பாராட்டு விழா நடைபெற்றது. மாணவி நிஷாவை விளையாட்டு பயிற்சியாளர்கள் பாரதிதாசன், நீலகண்டன் ஆகியோர் தலைமையில் ரயிலடியில் இருந்து மேளதாளங்கள் முழங்க அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்து சென்றனர். 

 

பள்ளிக்கு வந்த மாணவிக்கு ஆசிரியைகள் திலகமிட்டு மாலை அணிவித்து வரவேற்றனர்.   விழா பள்ளித் தலைமை ஆசிரியர் கஜானா தேவி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் எஸ்.எம்.நீலகண்டன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சோலை வரவேற்றார். 

 

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குநர் குமாரவேல், வர்த்தக கழகத் தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி, கல்வியாளர் கௌதமன், அணவயல் பாரத் பால் நிறுவன சங்கர், எஸ்.எம்.என் ஸ்போர்ட்ஸ் அகாடெமி கே.ஆர்.குகன், தலைமை ஆசிரியர் வாசுகி, ஆசிரியை லெட்சுமி, விளையாட்டு ஆர்வலர் பாக்யலட்சுமி திருநீலகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவியை வாழ்த்திப் பேசினர். மாணவி என்.நிஷா ஏற்புரையாற்றினார். நிறைவாக உடற்கல்வி ஆசிரியர் அன்னமேரி நன்றி கூறினார். 
 

சார்ந்த செய்திகள்