Skip to main content

மதுரை, தேனி மாவட்ட ஆட்சியர்களை உடனடியாக இடைக்கால பணிநீக்கம் செய்யவேண்டும் - கே.எஸ்.அழகிரி

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

 

தேனியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து இறங்கிய விவகாரம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

’’தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேர்தல் ஆணையம் தொடர்ந்து பாரபட்சமாக நடந்துகொண்டது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டன. மதுரை மக்களவை தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த அறைக்கு இரவு நேரத்தில் தாசில்தார் சம்பூர்ணம் அத்துமீறி உள்ளே நுழைந்தது சி.சி.டி.வி காமராவில் பதிவு செய்யப்பட்டு அம்பலமாகியது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இது தொடர்பாக அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். 

 

அ

 

இச்சூழலில் மதுரை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நூற்றுக்கணக்கான தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்திருக்கிறது. ஏற்கனவே தேனி மக்களவை தொகுதியில் தேர்தல் நேரத்தில் எத்தகைய பதற்றமும், வன்முறையும் தலைவிரித்தாடியது என்பதை எவரும் மறுக்க முடியாது. 

 

இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்வது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆக்கப்பட்டிருக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் தவறு நடப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.

 

மதுரையிலிருந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றது குறித்து விசாரிப்பதற்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ  உடனடியாக மதுரைக்கு வருகை புரிந்து ஆய்வு செய்து விசாரணை செய்ய வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இடமாற்றம் செய்வதற்கு காரணமாக இருந்த மதுரை, தேனி மாவட்ட ஆட்சியர்களை உடனடியாக இடைக்கால பணிநீக்கம் செய்யவேண்டும்.

 

தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நடந்துகொண்டுள்ள சூழலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அதனுடைய சாவியை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதியின் பாதுகாப்பில் வைக்கப்படவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் சுயேட்சையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறாமல் பல்வேறு முறைகேடுகள் நடப்பதற்கு காரணமாக இருந்த தமிழக தேர்தல் ஆணையத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இச்சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’’

 

சார்ந்த செய்திகள்