Skip to main content

போலீஸ் பாதுகாப்பு இருந்தும் பயம்! - நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய எஸ்.வி.சேகர்

Published on 20/06/2018 | Edited on 20/06/2018




பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் இன்று காலை ஆஜரானார்.

முன்னதாக எஸ்.வி.சேகர் தனது மயிலாப்பூர் இல்லத்தில் இருந்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் வரும் வரை மயிலாப்பூர் காவல்துறை டி.சி.சரவணக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு வழங்கினர். எழும்பூர் நீதிமன்றத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நீதிமன்றத்திற்கு சரியான நேரத்திற்கு வந்த அவர், நீதிபதி அழைக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்பதால் மற்ற வழக்குகளுக்காக வந்தவர்கள் நின்றுக்கொண்டிருக்கும்போது எஸ்.வி.சேகரை மட்டும் உட்கார வைத்திருந்தனர். எஸ்.வி.சேகரின் வழக்கு அரை மணி நேரத்திற்கு பிறகு 11 மணிக்கு மேஜிஸ்திரேட் மலர்விழி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மறுபடியும் அழைப்பதாக கூறியதால், அவரை மீண்டும் உட்கார வைத்திருந்தினர்.
 

 

 

பின்னர் 12.50 மணிக்கு அழைத்தவுடன் சென்றார். அப்போது ஜாமீன் மனு தாக்கல் செய்தது குறித்து கேட்கப்பட்டது. ஜாமின் பெறுவதற்காக கையெழுத்துப்போடவும், பிணைத் தொகை கட்டவும் இரண்டு பேர் உள்ளனர் என எஸ்.வி.சேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் யார் என மாஜிஸ்திரேட் கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெயச்சந்திரன், சீனிவாசன் ஆகியோர் இருவரும் குடும்ப நண்பர் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தலா பத்தாயிரம் ரூபாய் பிணைத் தொகையை கட்டுமாறு உத்தரவிட்ட மாஜிஸ்திரேட், 18.07.2018 அன்று இந்த வழக்கில் மீண்டும் எஸ்.வி.சேகர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். எஸ்.வி.சேகருக்காக பிணைத் தொகை கட்டி ஜாமீன் எடுத்தவர்களில் ஜெயச்சந்திரன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். நீதிமன்றத்திற்கு அவர் வந்தபோது தனது சட்டைப் பையில் ஜி.கே.வாசன் புகைப்படத்தை வைத்திருந்தார்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கருப்பு நிற காரில் கோர்ட்டுக்கு வந்த எஸ்.வி.சேகர், பத்திரிகையாளர்களையும், புகைப்படக்காரர்களையும் பார்த்தவுடன் அதே காரில் செல்ல தயங்கினார். பத்திரிகையாளர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்புவார்கள் என்ற பயத்தில் வெறொரு காரில் ஏறி தப்பித்தார்.

 

சார்ந்த செய்திகள்