சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது.
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. விசாரணையில் தொடர்ந்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. முன்னதாக ஞானசேகரன் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதும், அதை வைத்து பண்ணை வீட்டை வாங்கி அதில் வசித்து வந்ததோடு, இதேபோல் பல்வேறு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சிறப்பு விசாரணைக் குழு மேற்கொண்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் கைதான ஞானசேகரன் தொலைப்பேசியில் யாரோ ஒருவரிடம் 'சார்' என பேசியதை மீண்டும் மாணவி உறுதிப்படுத்தி இருக்கிறார். மாணவியை 'மிரட்டிவிட்டு வந்து விடுகிறேன்' என போனில் பேசியரிடம் ஞானசேகரன் தெரிவித்ததாக விசாரணையில் மாணவி தெரிவித்துள்ளார். அதேபோல் அடுத்த கட்டமாக ஞானசேகரனின் செல்போனை ஆய்வு செய்தில் பல்வேறு பெண்களின் ஆபாசப் படங்களும், திருப்பூரைச் சேர்ந்த குற்ற வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவர் ஞானசேகரனுடன் இருக்கும் வீடியோ ஒன்றும் கிடைத்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ஞானசேகரன் வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஞானசேகரன் பயன்படுத்தி வந்த லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் சம்பவத்தன்று ஞானசேகரன் பயன்படுத்திய தொப்பி, டி-ஷர்ட் ஆகியவற்றை பறிமுதல் செய்திருந்தனர். இந்நிலையில் சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள் 4 மணி நேரத்திற்கு மேலாக நடத்திய சோதனையில் ஆபாசப் படங்களை பதிவேற்றுவதற்காக பயன்படுத்தி லேப்டாப் மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.