
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திடாததற்கு, மத்திய பாஜக அரசின் சொல்படி நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமி அரசே காரணம் என கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஆளுநர் கையெழுத்திடாத நிலையில், அடுத்த தீர்மானத்தை பழனிசாமி அரசு அனுப்பாதது ஏன்? என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டப்பிரிவு 161இன்கீழ் விடுவிக்க உச்ச நீதிமன்ற உத்தரவிட்டதற்கிணங்க, தமிழக அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் கையெழுத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் ஆறு மாதங்கள் கடந்தும் ஆளுநர் அதில் கையெழுத்திடவில்லை. இது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியையும் திகைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
சட்டத்துக்குப் புறம்பாக இப்படி ஒரு கொடூரம் தங்களுக்கு இழைக்கப்படுவதைக் கண்டித்து வேலூர் சிறையில் முருகன் உண்ணாநிலை மேற்கொண்டுள்ளார். அவருக்கு ஆதரவாக அவர் மனைவி நளினியும் உண்ணாநிலை தொடங்கியுள்ளார். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, இந்த சட்டமீறலை மக்களிடம் முறையிட்டுவருகிறார்.

ஆனால் தமிழக அதிமுக அரசோ இதைக் கண்டும் காணாமல் இருந்துவருகிறது. அது கடமையும் பொறுப்பும் உள்ள அரசாக இருக்குமானால், இத்தனை நாட்கள் ஆகியும் ஆளுநர் கையெழுத்திடாத பட்சத்தில், சட்டப்படியான மறு தீர்மானத்தை அனுப்பி அவரைக் கையெழுத்திடச் செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏன் செய்யவில்லை பழனிசாமி அரசு?
காரணம் வெளிப்படை. மத்திய பாஜக மோடி அரசின் தயவினால்தான் சட்டவிரோதமாக ஆட்சியிலேயே ஒட்டவைக்கப்பட்டிருக்கிறது அதிமுக அரசு. அப்படியிருக்க அதன் சொல்லை மீறுவதெப்படி?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேறு பாஜகவுடன் அதிமுகவுக்கு கூட்டணி சேர வேண்டியுள்ளது; அதனால் பாஜகவின் சொல்லை மீறி அதிமுக அரசு எதையும் செய்வதற்கில்லை.
சட்டத்தை மதிக்காத ஆட்சிகளே மத்தியிலும் மாநிலத்திலும் இருப்பதால் தமிழக மக்கள் ஏமாற்றப்படுவதுதான் மிச்சமாகியுள்ளது. இந்த ஆட்சிகளை அப்புறப்படுத்துவது ஒன்றே மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுக்கு முதல் படியாக அமையும். அதனால் இந்த அரசுக்கெதிரான போராட்டங்களை மேலும் வலுப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திடாத நிலையில், அடுத்த தீர்மானத்தை பழனிசாமி அரசு அனுப்பாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பி, தன் கண்டனத்தையும் பதிவு செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார்.