
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இன்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் இந்திய முப்படைகள் கூட்டாக இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து அதிரடி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 70 பயங்கரவாதி கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
பகல்பூரில் ஜெய்ஷ் - இ - முகமது என்ற தீவிரவாத அமைப்பினுடைய முக்கிய பயிற்சி மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதன் தலைவர் மசூத் ஆசாத்தினுடைய வீடும் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் ஜெய்ஷி முகமது தீவிரவாத அமைப்பின் தலைவராகவும், இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக உள்ள மசூத் ஆசாத்தினுடைய குடும்பத்தினர் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாயுள்ளது. இதேபோல் இந்தியாவால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த லஷ்கர் -இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் மாலிக் மற்றும் முடாசிர் ஆகியோர் இந்தியாவின் தாக்குதலில் பலியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 2 குழந்தைகள், பெண்கள் உள்பட 10 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 38 காயமடைந்ததாகவும், பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய இந்த அதிரடி தாக்குதலில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தலைமையில் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு, இந்தியா மேற்கொள்ளும் அடுத்தகட்ட தாக்குதல் நடத்தினால், தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஆயுதப்படைகளுக்கு முறையான அதிகாரத்தை பாகிஸ்தான் அரசு வழங்கியுள்ளது. இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோட்டில் முன்னோக்கிச் செல்லும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் இன்று தாக்குதல்களை நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 41 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.