Skip to main content

செந்தில் பாலாஜி வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Senthil Balaji Case High Court action order

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

மேலும் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்ததுடன் இந்த வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் சென்னை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் அதனைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை. 

Senthil Balaji Case High Court action order

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் வழங்க உத்தரவிடக்கோரி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பிய கடிதம் எழுதி இருந்தார். அதன் அடிப்படையில் வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், விசாரணை நீதிமன்றங்களுக்கு எந்த காலவரம்பும் நிர்ணயிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி ஜெயச்சந்திரன், “நீதிபதி அல்லி இந்த் வழக்கை சரியாக கையாண்டு வருகிறார். உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்கிறேன். அதே வேளையில் நீதிபதி அல்லி நான்கு மாத கால அவகாசம் கேட்டுள்ளதால் மேலும் நான்கு மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிடுகிறேன்”எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இந்தியன் 2 படத்திற்குத் தடை?; கமல்ஹாசனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Kamal Haasan is ordered by the court to take action!for indian 2

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இந்தியன் 2. கடந்த 1996ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வருகிறது. இப்படம், வருகிற ஜூலை 12ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. இப்படத்தில் சித்தார்த், விவேக், மனோபாலா, பிரியா பவானி சங்கர், ரகுல் பீரித் சிங், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் மூன்றாம் பாகமாக இந்தியன் 3 ஆகவும் வெளியாகவுள்ளது. 

இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் படக்குழு வேகமாக செய்து வருகிறது. அந்த வகையில், சென்னை, மும்பை என சில இடங்களில் இந்தியன் 2 படக்குழு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்தியன் 2 படம் தொடர்பாக கமல்ஹாசனுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் 2 படத்திற்கு தடை கோரி ராஜேந்திரன் என்பவர் மதுரை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மஞ்சவர்ம தற்காப்பு கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமினுடைய ஆசானாக இருக்கக்கூடிய ராஜேந்திரன் அளித்த அந்த மனுவில், ‘கடந்த 1996ஆம் ஆண்டில் இந்தியன் படத்தின் முதலாம் பாகம் தயாரித்த போது கமல்ஹாசன் பயன்படுத்தும் வர்மகலை குறித்து என்னிடம் ஆலோசித்து படம் எடுக்கப்பட்டது. அந்தப் படத்திற்கு உரிய கிரெடிட்டை எனக்குப் படக்குழு கொடுத்தது. ஆனால், இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தும் வர்மகலை குறித்து என்னிடம் எந்த ஆலோசனையும் படக்குழு நடத்தவில்லை. எனவே, இந்தியன் 2 படத்தை திரையரங்கு, ஓ.டி.டி என எந்தத் தளங்களிலும் வெளியிடக்கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி செல்வ மகேஸ்வரி முன்பு வந்தது. அப்போது, அந்த மனு குறித்து கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், மற்றும் இந்தியன் 2 படத்தை தயாரித்த லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் ஆகியோர் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு வருகிற ஜூலை 9ஆம் தேதி காலை 10:30 விசாரணைக்கு வருகிறது. 

Next Story

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Bail to former Jharkhand Chief Minister Hemant Soren

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இதனையடுத்து கடந்த ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ஜனவரி 20 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ எனச் சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன்படி ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜனவரி 31 ஆம் தேதி  விசாரணை மேற்கொண்டனர்.

அதே சமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையைக் கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர், ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் சுமார் 7 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில் ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றார். இந்நிலையில் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கி அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.