கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உரிமம் இல்லாமல் மெத்தனால் உள்ளிட்ட கெமிக்கல் விற்பனை தொடர்பாக மாவட்ட அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையிலான குழுவினர் கடந்த அக்டோபர் மாதம் முதல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மெத்தனால் விற்பனை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, வேலூர் மெயின் பஜாரில் உள்ள ஒரு மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில், மெத்தனால் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் காவல் துறையினர் வேலூர் மெயின் பஜாரில் உள்ள (கஸ்தூரி) மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் திடீரென சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக மெத்தனால் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடையில் 5 லிட்டரும், வேலப்பாடியில் உள்ள குடோனில் 25 லிட்டர் என மொத்தம் 30 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்தனர்.
மேலும் கடையின் உரிமையாளர் வேலூர் கொசப்பேட்டை சேர்ந்த கஸ்தூரி ரங்கன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் மும்பையில் இருந்து மெத்தனால் வாங்கி, தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வகங்களுக்கு சட்ட விரோதமாகவும், அனுமதியின்றி விற்பனை செய்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து, கடை மற்றும் வேலப்பாடியில் உள்ள 2 குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், கள்ளச்சாராயம் கும்பலுக்கு மெத்தனால் விற்பனை செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.